செய்திமடல், ஜூன் 2021

Posted on June 6, 2021

Home Publications Posts செய்திமடல், ஜூன் 2021

செய்திமடல், ஜூன் 2021

அன்புள்ள திருச்சபையோரே,

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன். இயேசு கிறிஸ்துவின் சமாதானமும் சந்தோஷமும் உங்கள் அனைவரோடும் நிலைத்திருப்பதாக.

இதுவரை எனக்கு அளித்த ஆதரவிற்காகவும் மற்றும் அனைத்து ஜெபங்களுக்காகவும் நான் தேவனுக்கு நன்றி கூறுகிறேன். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல், எனக்கு காய்ச்சல் ஏற்பட்டது. முதல் இரண்டு நாட்களுக்கு எனக்குள் என்ன நடக்கிறது என்பதைக் அறிய முடியவில்லை, ஆனால் உண்மையில் நம்முடைய திருச்சபையார் எனக்கு முன்னேற்றமடைய உதவினார்கள். எனவே, உங்கள் அனைவரது ஜெபங்களுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி. கடந்த வாரத்தில், எனது பெலவீனத்தின் நிமித்தமாக, வழக்கமான அர்ப்பணிப்புடன் தொலைபேசி அழைப்புகளை ஏற்க முடியவில்லை. கர்த்தருக்கு சித்தமானால், வரும் நாட்களில், திருச்சபைக்கு ஓர் உதவும் கருவியாய் இருக்க அவர் என்னை பலப்படுத்துவராக.

கடந்த இரண்டு வாரங்களாக, உறவை பாதிக்கக்கூடிய பல்வேறு முக்கிய காரணிகளை நாம் விவாதித்து வருகிறோம். ஒரு உறவின் பல்வேறு அம்சங்களை நாம் விவாதிப்பதற்கான காரணம் என்னவென்றால், தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு நிறுவப்படாவிட்டால், நம்முடைய நிலைமை முட்களும் சச்சரவுகளும் நிறைந்ததாக இருக்கும். பலரும் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தேவனுடனான உறவின் நிலையின் விளைவு என்பதை உணர முடியவில்லை. அவர்கள், தாங்கள் சரியான தேர்வுகளைச் செய்தால் அல்லது அவர்களுக்கு போதுமான பலமும் பணமும் இருந்தால், அவர்களின் வாழ்க்கை சிக்கல் இல்லாததாக இருக்கும் என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்கள் செய்த தவறுகளோ அல்லது அவர்கள் சிக்கியுள்ள சூழ்நிலைகளோ அவர்களின் வலிக்கு காரணங்கள் என்று அவர்கள் கருதுகிறார்கள். இந்த ஏமாற்றத்தை நம்ப, உலக அமைப்பு பல காரணங்களைத் தரும், ஆனால் சத்தியத்தை அறிய நாம் மனந்திரும்ப வேண்டும்; இல்லையெனில், சத்தியம் நம் கண்களுக்கு குருடாகிவிடும். உங்களுக்கும் உங்கள் வேலைக்கும் அல்லது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அல்லது உங்களுக்கும் உங்கள் ஆரோக்கியத்திற்கும் இடையிலான எந்தவொரு உறவாக இருக்கட்டும்; இதுபோன்ற ஏதேனும் ஒரு பகுதியில் நீங்கள் பிரச்சினைகளை எதிர்க்கொள்வீர்களானால், தேவனுடைய சந்நிதியில் அமர்ந்து மனந்திரும்புதலுக்காக ஜெபிக்க வேண்டிய மிக முக்கியமான நேரம் இது.

இந்த வாரம், உறவுகளைப் பற்றிய இந்த விவாதத்தில், மூன்றாவது முக்கியமான அம்சமாகிய உரையாடல் குறித்து நாம் பார்க்கப் போகிறோம். நான் முதுநிலை கல்வி பயிலும்போது, வகுப்பின் போது எங்களுக்குள் பெரிய வாக்குவாதங்கள் எழுந்தன. இதன் காரணமாக, பல இளம் விரிவுரையாளர்கள், எங்களுடைய வாதங்களை ஏற்க முடியாமல் காயமடைந்தனர். அவர்கள் எங்களை இடைநீக்கம் செய்ய விரும்பினர், ஆனால் எங்கள் மூத்த விரிவுரையாளர்கள் ஐந்து பேர் எங்களோடு நின்று, விவாதங்களை ஊக்கமளிக்காததின் மூலம் கல்வி எவ்வாறு தவறான திசையில் செல்கிறது என்பதற்கான உன்னதமான வழி இதுவே என்று விளக்கினார்கள். நாம் ஓர் யுத்தத்தின் மூலம் தங்கள் உரிமைகளுக்காக போராடும் விலங்குகள் அல்ல, மாறாக நாம் ஒரே சமூகமாக ஒன்றாக வாழ்கிறோம். சமுதாயத்தை ஒரு சிறந்த இடமாக மாற்ற வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. நீங்கள் கற்றுக்கொண்டவற்றைக் கற்பிப்பதன் மூலம், நீங்கள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறீர்கள், மேலும் நீங்கள் கற்றுக் கொள்ளும் அளவுக்கு, இந்த கற்றல் தரம் உங்கள் பிரச்சினைகளுக்கான வழிகளைக் கண்டறிய உதவுகிறது. இது மிகவும் தெய்வீக கொள்கை. மெரியம்-வெப்ஸ்டர் என்னும் ஆங்கில அகராதில், உரையாடலை உணர்வுகள், அவதானிப்புகள், கருத்துகள் அல்லது யோசனைகளின் வாய்வழி பரிமாற்றம் என வரையறுக்கிறது. ஓர் உரையாடல் ஓர் உறவுக்கு உதவும், ஆனால் ஓர் வாதம் அதை அழிக்கும். எனவே, முதல் முக்கியமான விஷயம் என்னவென்றால், வாதத்திற்கும் உரையாடலுக்கும் உள்ள வித்தியாசத்தை அடையாளம் காண்பது.

ஒரு வாக்குவாதத்தை அல்லது வாக்குவாதிடும் பழக்கத்தை வளர்ப்பதன் மூலம், நமக்குள் ஏராளமான தீய பழக்கங்கள் வளர்கின்றன. இதை விளக்க, தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவைப் பயன்படுத்துகிறேன். ஏசாயா 1:18ல் தேவன் மனிதனுடன் வாக்குவாதம் செய்யாமல் உரையாடுகிறார், ஏசாயா 1: 18 “வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.” இங்கே, நம்முடைய கருத்துகளை அவருடன் பகிர்ந்து கொள்ள தேவன் நம்மை அழைக்கிறார், இதனால் நம்முடைய பாவமான பழக்கங்களிலிருந்து விடுபட முடியும். எனவே, ஒரு உரையாடல் நம்முடைய விடுதலைக்கு உதவுகிறது; ஆனால் வாக்குவாதங்கள் தேவபக்தியற்றவை. 1 கொரிந்தியர் 11:16 “ஆகிலும் ஒருவன் வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும், அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று அறியக்கடவன்.” ஒரு வாக்குவாதத்தில், சம்பந்தப்பட்ட மக்கள் தங்கள் கருத்துக்களுக்காக போராடுகிறார்கள். அவர்கள் தங்கள் கருத்துக்களை பகுப்பாய்வு செய்ய நேரம் எடுக்க மாட்டார்கள். சங்கீதம் 139: 21 & 22 வசனங்களில் தாவீது தனது கருத்தை தேவனிடத்தில் தெரிவிக்கிறான், உடனடியாக அடுத்த இரண்டு வசனங்களில் (23 & 24) அவன் தேவனுடைய வழியில் நடக்கின்றானா என்பதை தேவனோடு மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகிறான். நாம் தேவனுடைய சந்நிதியில் அமர்ந்து உரையாடும்போது, நாம் எங்கே, எப்போது சத்தியத்திலிருந்து விலகிவிட்டோம் என்பதை உணர்ந்து கொள்வோம், அது உண்மையில் நம்முடைய விடுதலைக்கு உதவும். இருப்பினும், ஒரு வாக்குவாதத்தில், தற்போதுள்ள முதல் தீய குணம் என்னவெனில் அனுமானித்தல். நாம் ஒரு சூழ்நிலையை கவனிக்கின்றோம், நாம் கவனித்ததை அப்படியே உண்மையென்று கருதுகிறோம். எல்லாவற்றையும் சரியான வழியில் கவனிக்காமல் இருப்பதால் இது நம்மை எளிதில் ஏமாற்றும். இரண்டாவது தீய குணம் பிடிவாதம். பெரும்பாலும், நம்முடைய பிடிவாதத்தின் காரணமாக மற்றவர் கற்றுக்கொண்டதை நாம் மறுத்து, அவர்களுக்கு நாம் ஒரு இடையூறாக இருக்கிறோம். மூன்றாவதாக, ஆணவம் மற்றும் நயவஞ்சகம். இந்த தீய பழக்கங்கள் நம்மை அவற்றின் வேர்களுக்கு அடுத்ததாக கீழே வைக்கும். ஆதியாகமம் 3:4,5, “அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது” இங்கே நாம் சோதனையை காணலாம். இதில் சோதனையானது மிகவும் எளிமையாய் இருக்கிறது: இது அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி ஊகிக்க வைக்கிறது. நாளையதினம் பிறக்காதபோது கூட, பிசாசு, இன்னும் பிறக்காத ஒன்றைப் பற்றி சிந்திக்க வைக்கிறது. எனவே, ஒரு வாக்குவாதத்தில் நாம் ஊகத்தின் மூலம் சோதிக்கப்படுகிறோம். ஆகையால், நம்முடைய வாழ்க்கையை குயவனிடம் சமர்ப்பிப்போம், இதனால் வாக்குவாதத்தின் தன்மை நம்மை விட்டு விலகக்கூடும், மேலும் இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் அமர்ந்து ஆரோக்கியமான உரையாடலை மேற்கொள்வதன் மூலம் பரிசுத்த செயலைக் கற்றுக்கொள்ளலாம்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.