செய்திமடல், நவம்பர் 2021

Posted on November 20, 2021

Home Publications Posts செய்திமடல், நவம்பர் 2021

செய்திமடல், நவம்பர் 2021

அன்புள்ள திருச்சபையோரே,

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன். இந்த செய்திமடல் மூலம் உங்களை சந்திக்க எனக்கு உதவிய தேவனுடைய கிருபைக்காகவும் இரக்கத்திற்காகவும் நான் நன்றி கூறுகிறேன். இயேசு கிறிஸ்துவின் அன்பும் கிருபையும் உங்கள் வாழ்க்கையில் போர்களை எதிர்கொள்ளவும், உங்களை சகிப்புத்தன்மையில் வளர்க்கவும் போதுமானதாக இருக்குமென்று நம்புகிறேன். மனஉளைச்சலை தரும் எந்த ஒரு சூழ்நிலையைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று நான் உங்களை தைரியப்படுத்துகிறேன், ஏனெனில் நீங்கள் எதிர்கொள்ளும் போராட்டம் மற்றும் துன்பம் என்பது தற்காலிகமானது. அது உங்களை என்றென்றைக்கும் துன்புறுத்திக்கொண்டிருக்க முடியாது. உருவாக்கினவரின் பார்வையில் நீங்கள் விலைமதிப்பற்றவர்கள். எனவே தளர்ந்துவிடாதீர்கள், உங்களுக்கான விடியற்காலம் மிக அருகில் உள்ளது.

தியாகம் ஒரு செலவு அல்ல:

இதுவரை, உறவுகளைப் பற்றி தியானிக்க தேவன் சில குறிப்புகளை கொடுத்துள்ளார். இந்த செய்திமடலில், தியாகம் என்பதை பற்றி தியானிக்கப் போகிறோம். எந்த உறவுக்கும் தியாகம் தேவை. இந்த வேளையிலே இந்த கொள்கை நமக்கு மிகவும் பரிச்சயமாய் இருக்கும் என்று நான் நம்புகிறேன். இருப்பினும், நம்முடன் உறவில் உள்ள ஒருவர் தியாகத்தை ஒரு செலவாக அல்லது இழப்பின் அடிப்படையில் பார்க்கும் போது, அது அந்த உறவை மறு மதிப்பீடு செய்வதற்கான எச்சரிக்கை சமிக்ஞையாகும். இந்த எச்சரிக்கைகளை புறக்கணிக்காதீர்கள்; நீங்கள் அவைகளை புறக்கணித்தால், அது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் ஒரு விலையுயர்ந்த தவறாகும். மிக முக்கியமாக, தியாகத்தின் உண்மையான அர்த்தத்தையும் புரிந்துகொள்வது அவசியம். பல சமயங்களில், உலக அமைப்பும் பிசாசும் ஒரு நபர் செய்யும் தியாகம் அல்லது நற்செயல்களை சுட்டிக்காட்டி, அவர்களுக்கு அல்லது அந்த உறவுக்கு நம்மைக் கடமைப்பட்டவர்களாக உணர வைக்கிறது. இது பிசாசின் தந்திரம். 1 கொரிந்தியர் 13: 3ல் வாசிக்கிறோம், எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை. இங்கே முக்கியமானது என்ன என்பதைப் பார்க்கிறோம், அதாவது தியாகம் அல்ல, அன்பே முக்கியமானது என்று. ஒரு உறவில் அன்பைத் தேடுவதற்குப் பதிலாக, தியாகத்தைப் பார்த்து, அது தான் அன்பு என்று நம்பினால், நம் வாழ்க்கையை அழிக்கும் வஞ்சனையை நாம் அனுமதிக்கிறோம். நாம், தியாகத்தின் மூலம் உறவின்மேல் உள்ள நமது உடன்படிக்கையை வெளிப்படுத்த முடியும் என்பது உண்மைதான். இருப்பினும், முதலீட்டிற்கும் (அதாவது உங்களுக்காக ஒருவர் செய்யும் செலவிற்கும்) தியாகத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். பல நேரங்களில், வெளிப்புற தோற்றம் அல்லது வெளிப்பாடு மூலம், முதலீடு மற்றும் தியாகம் இரண்டுமே ஒரே மாதிரியாக தோன்றும். இதை எளிதில் கண்டறிய முடியாது. ஆயினும்கூட, நல்ல செயல்களுக்குப் பின்னால் உள்ள நோக்கத்தை நீங்கள் தேடினால், இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முற்றிலும் எதிர்மாறாக இருப்பதைக் காண்பீர்கள்.

இந்த நவீன வாழ்க்கையில், பல நேரங்களில், லஞ்சம் அல்லது கூடுதல் பணம் செலுத்துவதன் மூலம் நம் நோக்கங்களை அடைகிறோம். பெரும்பாலும், பணம் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அன்புள்ள திருச்சபையோரே, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மீது இல்லாத எந்த நம்பிக்கையும் தீயதாகும். எனவே, நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிசாசு, தந்திரமான முறையில் செழிப்பான வாழ்க்கையே ஆசீர்வாதம் என்று மக்களை நம்ப வைத்தான். எனவே, அதே அடிப்படையில் உறவை மதிப்பிடும் தீய பழக்கத்தையும் நாம் கற்றுக்கொண்டோம். அதிலிருந்து நாம் எதைப் பெறலாம் என்ற குறிக்கோளுடன் உறவுகளையும் மதிப்பிடுகிறோம். 2 தீமோத்தேயு 3:1-5 ல், 1. மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. 2. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், 3. சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், 4. துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், 5. தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. இந்த பத்தியில், அன்பின்மையின் பலன்களைக் கண்டால் உறவை விட்டு வெளியேறுமாறு பவுல் நமக்கு வழிகாட்டுகிறார். எனவே, ஒரு உறவில் ஒவ்வொரு தியாகத்தின் பின்னும் உள்ள நோக்கங்களைத் தொடர்ந்து தேடுவது முக்கியம். இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தபோது, அவருடைய நோக்கமானது, நம்மை நம்முடைய இருளிருந்தும், நொறுக்குதலிலிருந்தும், வெறுமையிலிருந்தும் மற்றும் நம்மைச் சிக்கவைத்த எல்லா வகையான அழிவுகளிலிருந்தும் நம்மைக் காப்பாற்றுவதாக இருந்தது. அவரது தியாகத்தால் அவருக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை, அதில் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. அவருடைய தியாகம் நம்மைக் காப்பாற்றியது, அது அன்பிலிருந்து வந்தது. ஆகையால், தியாகத்தைப் பற்றி தேவனிடமிருந்து வரும் இந்த முக்கியமான வெளிப்பாட்டை நாம் புறக்கணிக்காமல், அவருடைய இரக்கத்திற்காக மன்றாடுவோம், இதனால் அவர் நம்மை அன்புணர்வுள்ளவர்களாய் உருவாக்க முடியும்.

முதலீடா? அல்லதுதியாகமா?

பல சமயங்களில், நமக்குப் பலன் தரும் என்று நம்பி நம்முடைய வளங்களைச் செலவழிக்கிறோம். ஒரு வங்கியில் நாம் எப்படி முதலீடு செய்கிறோமோ அதே வழியில்தான் தேவனுடைய ராஜ்யத்திலும் முதலீடு செய்ய முயற்சி செய்கிறோம். தசமபாகம் கொடுத்தால், அதற்குப் பதிலாக தேவன் நம்மை நூறு மடங்கு ஆசீர்வதிப்பார் என்று நாம் நினைக்கிறோம். தேவனுடைய ராஜ்யத்திற்கு காணிக்கை வழங்குவதை வணிக முதலீட்டு கொள்கையுடன் செய்யப்படக்கூடாது. தியாகம் என்பது ஒரு தாய் தன் குழந்தையைப் பெற்றெடுக்கும் உழைப்பைப் போன்றது. தாய் தன் குழந்தையின் நலனுக்காக எல்லாவிதமான வலிகளையும் துன்பங்களையும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறாள். ஆதியாகமத்தில் ஆபேலின் தியாகத்தைப் பற்றி நாம் அறிவோம். அவன் செய்த அனைத்து நல்ல செயல்களுக்கும் வெகுமதியாக எதையும் பெறவில்லை என்றாலும், அவன் இன்னும் சிறந்த தியாகத்தை தேவனுக்கு செலுத்தினான். பலியின் காரணமாக அவன் தனது உயிரை இழந்தான், ஆனால் தேவனின் தரத்தில் அது மிக சிறந்த தியாகங்களில் ஒன்றாகும். எபிரேயர் 11:4-ல், விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக்குறித்து தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான். ஆபேல் தனது தியாகத்தின் மூலம் பெற்ற சான்றிதழ் இது. முதலீடு என்பது உலகத்திற்கேதுவானவைகளை பெறுவது மற்றும் அது அழியக்கூடிய நன்மைகளைப் பற்றியது, ஆனால் மறுபுறம், தியாகம் என்பது நித்திய ஜீவனைப் பெறுவது. அன்பு நித்திய ஜீவனுக்கு உரியது. சரீர உலகத்தைச் சேர்ந்தவர்கள் தன்னலமற்ற தியாகங்களின் மூலம் கிடைக்கும் ஆசீர்வாதங்களைப் புரிந்து கொள்ள முடியாது. அவர்கள் அதை ஒரு செலவாக மட்டுமே பார்க்க முடியும். அத்தகைய நபர்களால் ஒரு உறவைப் புரிந்து கொள்ளவோ அல்லது அதில் உண்மையாக இருக்கவோ முடியாது, ஏனென்றால் அவர்களின் தேவன் அவர்களுடைய பணமும் சொத்தும் ஆகும். நாம் ஆபத்தான காலங்களில் வாழ்கிறோம், ஏனென்றால் 2 தீமோத்தேயு 3:1-5 இல், 1. மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. 2. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், 3. சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், 4. துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், 5. தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. ஜனங்கள் தங்கள் அன்பை இழந்து, பணம் அவர்களை ஆளத் தொடங்கும் போது, தேவனுடைய வார்த்தையின்படி, நாம் அவர்களுடன் கூடி வாழ்வதற்கு அவர்கள் ஏற்ற ஜனங்கள் அல்ல. அவர்கள் உங்களில் இருக்கும் நித்திய ஜீவனை அழிக்கக்கூடிய ஆபத்தான ஜனங்கள். அதனால்தான் அவர்களிடமிருந்து தப்பி ஓடுமாறு வேதம் பரிந்துரைக்கிறது. யோசேப்பு, தானியேல், மற்றும் மற்ற புனிதர்களைப் போல நாமும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவர்களிடமிருந்து தப்பி ஓட வேண்டும். யோசேப்பு தனது நற்பெயரையும் தண்டனையையும் காப்பாற்றுவதற்குப் பதிலாக தனது ஆன்மாவைக் காப்பாற்ற முன்னுரிமை அளித்தான். இதுதான் நாம் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான கொள்கை. நாம் சரியான வகையில் ஐக்கியங்களை உருவாக்காவிட்டால், இரட்சிப்பின் மற்றும் நித்திய ஜீவனின் மகிழ்ச்சியைப் பாதுகாப்பது மிகவும் கடினம். எனவே, தியாகத்தை முதலீடாகப் பார்க்கும் மக்களிடமிருந்து நாம் தப்பி ஓட வேண்டும். அவர்கள் வேறு உலகத்தைச் சேர்ந்தவர்கள். நாம் அவர்களுடன் இணைக்கப்பட்டுள்ள இயேசு கிறிஸ்துவின் வழியிலும் நடக்க முடியாது. அதனால்தான் அவர்களை விட்டு ஓடிப்போகவும், அவர்களை சகித்துக் கொள்ளாமல் இருக்கவும் வேதம் சொல்கிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கையையும் மற்றவர்களின் வாழ்க்கையையும் கெடுக்கும் திறன் கொண்டவர்கள். பெரிய தவறுகளை செய்த சிலரைப் பற்றி வேதத்தில் பார்க்கலாம். அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்தது. பாவச் செயலில் சிக்கிய ஸ்திரியிடம், “இனி பாவம் செய்யாதே” என்று இயேசு கிறிஸ்து கூறினார். இயேசு கிறிஸ்து பாவிகளை இரட்சிக்க வந்தாரே தவிர, பணத்தை விரும்பி, அன்பைக் கொலை செய்பவர்களுக்காக அல்ல. பணம், வேலை, அந்தஸ்து, செல்வம் ஆகியவை நம் வாழ்வில் கொடுக்கப்படுவதின் காரணம் அவைகள் வணங்கப்படுவதற்க்கோ அல்லது தேவனின் விலைமதிப்பற்ற வாக்குறுதிகளைப் பெருக்குவதற்காக அவற்றை செலவிடுவதற்கோ அல்ல. மாறாக, அவைகள் மற்றவர் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் உறவுகளை நிலைநிறுத்துவதற்கும் தன்னலமின்றி தியாகம் செய்வதற்கான கருவிகளாக வழங்கப்படுகிறது.

அன்புள்ள திருச்சபையோரே, உலகத்தைப் பெறுவதற்காக உங்கள் வாழ்வில் வாக்குறுதி அளிக்கப்படவில்லை, மாறாக தேவனுடைய இராஜ்ஜியத்தைப் பெறுவதற்காக வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. பேதுரு இதை மிகத் தெளிவான முறையில் விளக்குகிறார், 2 பேதுரு 1:4, இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே, உங்கள் வாழ்க்கையில் தேவபயத்தை அழிக்கக்கூடிய ஒரு ஐக்கியத்தை விட்டுவிடுவது மிகவும் முக்கியம். உங்கள் வாழ்க்கையானது செழுமையை வணங்கும் ஜனங்களால் சூழப்பட்டிருக்கும்போது, அவர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் உங்கள் இரட்சிப்பின் வஸ்திரத்தை காத்துக்கொள்ளுங்கள், ஏனெனில் உலகின் இன்பங்கள் அழிக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. எனவே அதற்கு இடம் கொடுக்காதீர்கள். அது பல ஏமாற்றும் இன்பங்கள் மற்றும் தற்காலிக மகிமைகள் மூலம் உங்களை கவர்ந்திழுக்க ஒரு தந்திரமான வழியைக் கொண்டுள்ளது. அவற்றையெல்லாம் தேவனால் வெளிப்படுத்தப்பட அனுமதியுங்கள். தேவனுடைய வார்த்தை சொல்வது உண்மை என்பதை உலகுக்கு நிரூபிக்க தேவன் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவார். தாவீது, கோலியாத்துடனான தனது சண்டையில், வல்லவன் வெற்றி பெறப் போவது அல்ல என்பதை நிரூபித்தார். தீமையால் மனிதனை அழிக்க முடியாது என்பதை யோசேப்பு தன் வாழ்வின் மூலம் நிரூபித்தார். இதேபோல், நம்மிடம் இன்னும் பல சாட்சிகள் உள்ளன. எனவே, ஒவ்வொரு தியாகத்திலும் அன்பைத் தேடுங்கள். நீங்கள் ஒருவரின் தியாகத்தில் அன்பையல்லாமல், வேறு எந்த நோக்கத்தையும் காணும்போது, மற்றும் அந்த நோக்கம் எதிர்காலத்திற்கான ஆதாயத்தைப் பற்றியதாக இருந்தால், அத்தகைய ஐக்கியத்தை விட்டுவிடுவது நல்லது. இது ஒரு வேடனுடைய கண்ணி.

முடிவுரை:

முடிவாக, ஒரு தியாகம் ஒரு உறவுக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்ற கேள்வியை நான் விளக்க விரும்புகிறேன். ஒரு தியாகத்தை மதிப்பிடுவதற்கான சரியான வழி அதை இயேசு கிறிஸ்துவுடன் தொடர்புபடுத்துவதாகும்.  இயேசு கிறிஸ்து பரலோக சிங்காசனத்தை விட்டுவிட்டு, சிலுவையை எடுத்து நம் வாழ்க்கையை சிறப்பாக்கினார். அதனால்தான் நாம் அவருடைய அன்பிற்கு அடிமைகளாக நம் வாழ்க்கையை சமர்ப்பிக்கிறோம். அவர் தம்முடைய இரத்தத்தையும், மாம்சத்தையும், வாக்குத்தத்தங்களையும் நம்மை குணமாக்குவதற்காக அளித்து, மற்றும் சந்தோஷத்திற்கும் மகிழ்ச்சிக்கும் நேராக நம்மை வழிநடத்துகிறார். இங்கே, அவர் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் அல்லது அவரின் தியாகத்தால் அவருக்கு என்ன லாபம்? எதுவும் இல்லை; அது தன்னலமற்றது. அவரிடம் ஏற்கனவே எல்லாம் இருக்கிறது. நம்மால் அவருக்கு எந்த லாபமும் இல்லை. அவருடைய மகிழ்ச்சி நம்மை மகிழ்ச்சியடையச் செய்வதற்கும், நம்மை களிகூறப்பண்ணுவதற்கும் அன்றி வேறில்லை. அவர் எதிர்பார்ப்பதெல்லாம் நாம் அவருடைய தியாகத்தை அங்கீகரித்து அவருடைய அன்பின் மேல் நம்பிக்கை வைப்பதுதான். அதனால்தான் அவர் லேவியராகமம் 11:45 இல் கூறினார் நான்உங்கள்தேவனாயிருக்கும்படிஉங்களைஎகிப்துதேசத்திலிருந்துவரப்பண்ணினகர்த்தர், நான்பரிசுத்தர்; ஆகையால், நீங்களும்பரிசுத்தராயிருப்பீர்களாக. அவருடைய வழிகள் நம்முடையதை விட சிறந்தவை என்பதை அவர் நமக்குப் புரிய வைக்க முயற்சிக்கிறார். நாம் நம்மைக் கவனித்துக் கொள்ள முயற்சிப்பதை விட அவர் நம்மீது அதிக அக்கறை கொண்டிருக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். உறவில் செய்யப்படும் ஒவ்வொரு தியாகத்தின் பின்னும் இதுதான் சரியான நோக்கமாக இருக்க வேண்டும்.

அன்பின் நோக்கத்தில் ஒருவர் ஒரு உறவில் இப்படி தியாகம் செய்தால், அதற்கு நாம் எப்படி பதில் சொல்ல வேண்டும்? ஒருவர் தியாகம் செய்யும்போது, அதைச் செய்வது அவருடைய கடமை அல்லது நன்றிக்கடன் அல்லது வேலை அல்லது பழக்கம் என்று நாம் நினைக்கக்கூடாது. அதை சாதாரணமாக அல்லது அற்பமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு நபர் தொடர்ந்து தியாகம் செய்யும்போது, நாம் அதற்கு உணர்ச்சியற்றவர்களாக இருக்கக்கூடாது. இரண்டு முக்கியமான விஷயங்களை நாம் மனதில் கொள்ள வேண்டும். முதலாவதாக, சடங்காகவோ சம்பிரதாயமாகவோ அல்லாமல், நம் இருதயத்திலிருந்து “நன்றி” என்று சொல்லும் பழக்கத்தை நாம் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, உறவுக்காக தியாகம் செய்பவருக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும் அல்லது நம்மை அர்ப்பணிக்க வேண்டும். இதைத்தான் வேதம் சமர்ப்பணம் என்று அழைக்கிறது. அன்பு அதை உண்டாக்குகிறது.

சரியான விதமான உறவுகளைக் கட்டியெழுப்ப நமது தேவன் தாமே உங்களுக்கு உதவுவராக. அவருடைய வல்லமையினாலும் அன்பினாலும், உடைந்த உறவுகள் அனைத்தும் குணமடைவதாக, மற்றும் அவருடைய கிருபையினால், வேடனுடைய கண்ணியிலிருந்து நீங்கள் பாதுகாக்கப்படுவீர்களாக.

அன்புள்ள திருச்சபையோரே, உங்களைப் பரிபூரணமாக்கும் திறன் கொண்ட பூரணமான குயவனிடம் உங்கள் வாழ்க்கையைச் சமர்ப்பியுங்கள். இதன் மூலம் நீங்கள் நன்றியுள்ளவர்களாகவும் உறவுகளை மதிக்க கற்றுக்கொள்ளுகிறவர்களாகவும் மாற  முடியும். தேவன் கொடுத்த இந்த குணாதிசயத்தை வணிக மனப்பான்மை அழிக்கக் கூடாது. தேவனாகிய கர்த்தர் உங்களை உலக அமைப்பின் மாசுபடுத்தும் தன்மையிலிருந்து பாதுகாப்பராக.

கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.