செய்திமடல், நவம்பர் 2022

Posted on November 21, 2022

Home Publications Posts செய்திமடல், நவம்பர் 2022

செய்திமடல், நவம்பர் 2022

அன்புள்ள திருச்சபையோரே,

இயேசு கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

இந்த செய்திமடல் உங்களை உற்சாகமான ஆவியிலும்ஆரோக்கியத்துடனும் சந்திக்கிறது என்று நம்புகிறேன். தேவனுடைய ராஜ்யத்தை நிறுவுவதில் ஒரு ஐக்கியமாய் நீங்கள் எனக்கு அளித்த ஊக்கத்திற்காகவும் மற்றும் ஜெபத்தினால் அளித்த ஆதரவிற்காகவும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இருப்பினும், தேவனிடமிருந்து பெற்றதை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் வலிமை ஒரு சிலருக்கு மட்டுமே உள்ளது என்பதை நான் உணர்ந்தேன். பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக, நமது வேதாகம ஆய்வு கூடுகையிலும், சபை கூடுகையிலும், வீட்டு கூடுகையிலும் பல வழிமுறைகளை அறிமுகப்படுத்த முயற்சித்தேன். ஆயினும்கூட, திருச்சபையார் தங்கள் பணத்தைப் பகிர்ந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தாலும், இன்னும் தங்களின் வெளிப்பாடுகளையும் அனுபவங்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தில் வளர முன்வரவில்லை. இது நாம் கவனம் செலுத்தவேண்டிய சிவப்பு எச்சரிக்கை. மத்தேயு 25:14 – 30 இல் பிதாவின் சித்தத்தின்படி ஜனங்களுக்கு கொடுக்கப்பட்ட தாலந்துகளைப் பற்றிய உவமையைக் காண்கிறோம். அதைப் பெருக்கப் பயன்படுத்தியவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டார்கள், ஆனால் தனது தாலந்துகளை ஒளித்துவைத்தவன் அவனுக்கு கொடுக்கப்பட்டதை இழந்தான். அவ்வாறே, சபையின் நோக்கமும் தேவனிடமிருந்து நாம் பெற்றதை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதாகும். கிறிஸ்துவின் சரீரமாக, நீங்கள் சந்தித்த ஜனங்களுக்காக தயவுசெய்து ஜெபித்துக்கொண்டே இருங்கள். “யாருக்காக, எதற்காக நான் ஜெபிக்க வேண்டும்?” போன்ற கேள்விகளுடன் நீங்கள் போராடிக் கொண்டிருந்தால், மத்தேயு 5:44 சிறந்த தீர்வு. 43. உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 44. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். 45. இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். நல்ல கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்து அவருடைய பிள்ளைகளாக இருக்க உங்களுக்கு உதவுவாராக.

கடந்த சில செய்திமடல்களில், உறவுகளைப் பற்றி விவாதித்தோம். இது உறவுகளைப் பற்றிய நிறைய உண்மையைக் கற்றுக்கொள்ள நமக்கு உதவியது. இந்த தலைப்பில் நாம் கொண்டிருந்த அனைத்து போதனைகளுக்கும் நான் தேவனுக்கு நன்றி கூறுகிறேன். இந்த மடலில், நாம் ஒரு புதிய தலைப்பை பார்க்கப் போகிறோம், அதாவது, ‘தேவனுடைய வார்த்தை’. உலகம் உருவாவதற்கு முன்னே,
பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது.
அதே மூன்று காரியங்கள் இன்றும் நம் வாழ்வில் தொடர்கின்றன. மேலும் இவை, பிசாசு நம்மை அழிக்கவும் நம் உறவுகளைப் பாதிக்கவும் ஒரு வழியை உருவாக்குகின்றன. . இவற்றை  குறித்து கீழே விவாதிப்போம்.

ஒழுங்கின்மை

ஒழுங்கின்மை என்பதன் அர்த்தம், முற்றிலும் குழப்பமான நிலையில் இருப்பதாகும். இந்த தலைப்பைப் புரிந்துகொள்வதற்கு நாம் சில கேள்விகளுக்கு பதிலை புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, தேவன் சிருஷ்டிகர் என்றால், ஒழுங்கின்மை எப்படி இருக்க முடியும். மேலும், நாம் ஏன் ஒழுங்கின்மையுடன் இருக்கிறோம்? ஒழுங்கின்மை தேவனுடைய வார்த்தையால் அழிக்கப்பட்டது என்பது தெளிவாக இருக்கிறது.. அதை நாம் அனைவரும் அறிவோம், நம்புகிறோம். ஆனால், தேவனுடைய வார்த்தையின் கண்ணாடி வில்லை இல்லாமல் நாம் உலகத்தை பார்க்க முயற்சித்தால் குழப்பம் நீடிக்கும் என்பதை புரிந்துகொள்வது அவசியம். அப்படிச் செய்யும்போது,  நாம் எதைப் பார்த்தாலும் அது நம் குறி மற்றும் கவனத்தை மங்கலானதாக்கி, நம் வாழ்வில் பெரும் ஒழுங்கின்மையை உண்டாக்கும்.  எதையும் பற்றிய நமது புரிதல் தேவனுடைய வார்த்தையால் மட்டுமே சரியாக இருக்கும், இல்லையெனில் எல்லாமே குழப்பமாக இருக்கும். எனவே, இந்த இரண்டு வார்த்தைகளில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம், அதாவது, ‘ஒழுங்கின்மை’ மற்றும் ‘தேவனுடைய வார்த்தை’.

ஒழுங்கின்மை என்கிற சொல் அதன் தன்மையை வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தலாம். சில சூழ்நிலைகளில், இது ஒரு முடிவு மற்றும் ஆரம்பம் இல்லாத ஒரு சுழற்சியைப் போல் செயல்படுகிறது. மற்ற சூழ்நிலைகளில், பிரச்சனையோ, தீர்வோ தெரியாத சூழ்நிலையை உருவாக்குகிறது. உதாரணமாக, நாம் கோவிட்-19ஐ எதிர்கொண்டபோது, உலகம் முழுவதும் முழு குழப்பத்தில் இருந்தது, அதாவது நாம் அறியப்படாத எதிரிக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தோம். இது தவிர, எந்த இலக்கும் காரணமும் இல்லாமல் விஷயங்களைச் செய்வதற்கும் இது வழிவகுத்தது. ஒரு சிக்கலைக் கட்டுப்படுத்த முடிந்தவரை அனைத்தையும் நாம் தீவிரமாக முயற்சித்தோம். இவையெல்லாம் வேறுபட்டவையாக தோன்றினாலும் இவைகள் ஒழுங்கின்மையின் ஒத்த நிறங்களே, இந்த வகையான விஷயங்களை நாம் ஒருபோதும் ஒழுங்கின்மைக்கு ஒத்ததாக சிந்திக்கவோ அல்லது அதனுடன் தொடர்புபடுத்தவோ மாட்டோம். எனவே, ஒழுங்கின்மைக்கான காரணத்தையும் தீர்வையும் அறிவது நம் வாழ்க்கையை மாற்றுவது மட்டுமல்லாமல், அது உலகத்தை சிறந்த இடமாக மாற்றும். ஒழுங்கின்மைக்கான முதல் கருவியை இன்று பார்ப்போம்.
1. வஞ்சனை:
ஒழுங்கின்மையின் மிகப்பெரிய பலமே அது ஒரு நபரின் வாழ்க்கையில் நுட்பமாக நுழையும் வழியாகும். நம் வாழ்வில் சில நெறிமுறைகளை தக்க வைத்துக் கொள்ள, நமக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவுகோல்கள் தேவை. உதாரணமாக, நீங்கள் உங்கள் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், அதற்கு ஒரு பரிந்துரைக்கப்பட்ட அளவு உள்ளது, அதற்கு கீழே நாம் நமது சர்க்கரை அளவை பராமரிக்க வேண்டும். அதேபோல், நாம் ஒரு நிலத்தை வாங்கும் போது, எல்லையை நிர்ணயிக்க, பரிந்துரைக்கப்பட்ட அளவுகள் தேவை. பல சூழ்நிலைகளில், இந்த பரிந்துரைக்கப்பட்ட அளவுகோல்கள் நம் வாழ்வில் இருந்து திருடப்பட்டிருக்கிறது. நாம் நமது ஆன்மீகத்திற்குரிய ஒழுக்கத்திற்குரிய, நீதிநெறிக்குரிய மற்றும் சரீரத்திற்கேதுவான வாழ்க்கைத் தரங்களை தொலைத்துவிட்டோம். துரதிர்ஷ்டவசமாக, நாம் அதை இழந்துவிட்டோம் என்பதைக்கூட உணரமுடியவில்லை. இதுதான் வஞ்சனை, மற்றும் ஒழுங்கின்மையின் ஆரம்பப் புள்ளி ஆகும்.  எனவே, ஒழுங்கின்மைக்கான காரணத்தை சிந்திக்க, வஞ்சனை என்ற வார்த்தையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தேவனே எல்லாவற்றையும் படைத்தவர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவரே சிருஷ்டி கர்த்தர், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எல்லாவற்றையும் சிருஷ்டித்து, ஸ்திரப்படுத்துவது அவர் ஒருவரே. அவருடைய வடிவமைப்பு மட்டுமே சோதனை காலத்தில் நிலைநிற்கும்.  உதாரணமாக, நமது தண்ணீரின் தேவையை ஆறுகள், குளங்கள், மழைகள் மற்றும் கிணறுகள் வடிவில் பூர்த்தி செய்ய தேவனால் திட்டமிடப்பட்டது. இந்த அமைப்புகள், சில சமயங்களில் போராட்டமாய் இருந்தாலும், காலத்தின் சோதனையின் மத்தியிலும்  நிலைநிற்க முடிந்தது. ஆனால், நீரை ஆடம்பரமாக அனுபவிக்க  நினைத்த மனிதன் ஆழ்துளை கிணறுகளை தோண்ட ஆரம்பித்தான். ஆம், அது உடனடியாக மிகுந்த ஆறுதலைக் கொடுத்தது, ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது, ஆழ்துளை கிணறுகளின் மோசமான விளைவுகளான மற்றொரு சிக்கலை நாம் எதிர்கொள்கிறோம். ஆழ்துளை கிணறுகளால், நீர்மட்டம் வேகமாக குறைந்து, ஆழ்துளை கிணறுகள் கூட வறண்டு கிடக்கிறது. மழையில்லாததால் ஆழ்துளை கிணறுகள் தேவை என்று நாம் வாதிடலாம். எவ்வாறாயினும், மழையின்மையினால் பல வளமான நிலங்கள் பாலைவனமாக மாறிய போதிலும், வரலாற்றில் மீண்டும் மீண்டும் இந்நிலைமை ஏற்பட்ட போதிலும், அது ஒருபோதும் நமது நீர்மட்டத்தை குறைக்கவில்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம். மனிதர்களாகிய நாம் ஆழ்துளைக் கிணறுகளை அறிமுகப்படுத்தும் வரை, நமது நீர் நிலைகள் பாதுகாக்கப்பட்டன. இதை எளிமையாக்க சொல்ல வேண்டுமானால், மழை இல்லாதபோது நமக்கு தண்ணீர் இல்லாமல் இருந்தது, ஆனால் பற்றாக்குறையால் நாம் அழிந்துபோகவில்லை. எனவே, நவீன கால கண்டுபிடிப்புகள் நமக்கு விரைவான தீர்வுகளை வழங்கினாலும், அவை நாம் காணப்படாத அழிவின் விளைவாக பெரும் விலையுடன் வருகின்றன. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குறுக்குவழிகளை உருவாக்கி, தேவனுடைய தரத்திலிருந்து விலகிச் செல்வதே வஞ்சனை என்பதாகும்.

குறிப்பாக தண்ணீர் பிரச்சனையில் நான் அனுபவித்த ஒரு சாட்சி மூலம் இதை சிறப்பாக விளக்குகிறேன். சமுதாயத்தில் போராடும் மக்களின் நலனுக்காக நடத்தப்படும் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராக நான் இருந்தேன். பாலைவனமாக இருந்த, யாரும் வசிக்க விரும்பாத பாழடைந்த பகுதியில் ஒரு சிறிய கட்டிடத்தை இந்த அறக்கட்டளை இதற்காக தேர்வு செய்தது. ஆனால், தேவன் எங்களுக்கு ஒரு நல்ல நீரூற்றைக் கொடுத்தார், நாங்கள் தண்ணீர் வரத்தை அனுபவித்துக்கொண்டிருந்தோம். ஆனால், நாளடைவில் ஆழ்துளை கிணறு வறண்டு போனதால், ஆழ்துளை கிணற்றில் இறக்கிய நீர் மூழ்கி இயந்திரத்தை எடுப்பதிலும் சிரமம் ஏற்பட்டது. எனவே, எங்கள் உலக அறிவின்படி, மேலும் இரண்டு ஆழ்துளைக் கிணறுகளை தோண்டி, நிறைய சீரமைப்புகள் செய்தோம், ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. எங்களுக்கு இன்னும் தண்ணீர் இல்லை. இருப்பினும், என் மனதில் ஒரு சிறிய எண்ணம் நீடித்தது, அது மனந்திரும்புதலைப் பற்றியது. பின்னர், அந்த எண்ணத்தை அங்கீகரித்து மனந்திரும்புதலுக்காக ஜெபிக்க ஆரம்பித்தேன், இது வேதத்திலிருந்து தண்ணீர் பிரச்சினை பற்றிய வெளிப்பாடுகளைப் பெற வழிவகுத்தது. எனக்கு கிடைத்த முதல் வெளிப்பாடு யாத்திராகமம் 17 வது அதிகாரத்திலிருந்து, தேவன் கன்மலையை திறந்து தம் ஜனங்களுக்கு தண்ணீரைக் கொடுத்தார் என்பது. இந்த வெளிப்பாடு எனது சூழ்நிலையுடன் நன்றாகப் பொருந்தியது, ஏனென்றால் நாங்கள் பணிக்குத் தேர்ந்தெடுத்த இடம் ஒரு பாறை நிறைந்த இடமாக இருந்தது, ஆனால் நாங்கள் தொடங்கியபோது எங்களுக்கு தண்ணீர் கொடுத்து தேவன் எங்களுக்கு ஒரு அதிசயத்தை நிகழ்த்தினார். தேவன் ஏன் இந்த அற்புதத்தை செய்தார் என்பது 7வது வசனத்தில் இப்படியாக விளக்கப்பட்டுள்ளது. 7. இஸ்ரவேல் புத்திரர் வாதாடினதினிமித்தமும், கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரைப் பரீட்சை பார்த்ததினிமித்தமும், அவன் அந்த ஸ்தலத்திற்கு மாசா என்றும் மேரிபா என்றும் பேரிட்டான். இஸ்ரவேல் ஜனங்களின் தேவனை எதிர்க்கும் குணமே அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம் என்பது மிகத் தெளிவாகத் தெரிந்தது. தேவனுக்கு எதிராக முரட்டாட்டமாக செயல்படும் இயல்பை குணப்படுத்த, தேவன் இந்த அற்புதத்தை நிகழ்த்தினார், ஆனால் ஜனங்கள் குணமடைய ஏங்குவதற்குப் பதிலாக, அவர்கள் அதிசயம் மற்றும் தற்காலிக தீர்வுகளில் கவனம் செலுத்தி, மேலும் இரண்டகம் பண்ணினார்கள். அதுபோலவே, தேவன் எங்கள் கட்டிடத்திற்கு ஆரம்பத்தில் ஒரு அதிசயமாக தண்ணீரைக் கொடுத்தார், ஆனால் நாங்கள் மனந்திரும்புதலின் கண்ணாடி வில்லையின் மூலம் பார்ப்பதற்கு கவனம் செலுத்தவில்லை. மாறாக ஆழ்துளை கிணறுகள்தான் நமது பிரச்சனைகளுக்கு தீர்வு என்று தேவன் அவற்றை வறண்டு போக செய்யும் வரை நம்பி வந்தோம். இந்த வெளிப்பாடு மனந்திரும்புவதற்கான எனது வேண்டுதலை மேலும் தூண்டியது. பின்னர், இதைத் தொடர்ந்து ஈசாக்கின் வாழ்க்கையிலிருந்து இரண்டாவது வெளிப்பாட்டை நான் பெற்றேன். ஆதியாகமம் புத்தகத்தில், 26வது அதிகாரத்தில், பஞ்சம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை போன்ற பிரச்சனையை ஈசாக்கு எதிர்கொண்டான். அவன் தனது அறிவில் ஒரு தீர்வைக் கண்டுபிடித்தான், ஆனால் கர்த்தராகிய ஆண்டவர் அதை நிராகரித்தார். ஆனால் ஈசாக்கு தேவனுடைய சத்தத்திற்கு கீழ்ப்படிந்தபோது,  12 மற்றும் 13 வசனங்களின்படி அவன் தேவனால் வழிநடத்தப்பட்டான் மற்றும் விடுதலையைக் கண்டான். 12. ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்; 13. அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான். எனவே, விடுதலை என்பது பிரச்சினைகளைத் தீர்ப்பது அல்ல, மாறாக பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட்டு அவருடைய வழிகாட்டுதலில் நிலைத்திருப்பதுதான் என்பதைப் புரிந்துகொள்ள இந்த வெளிப்பாடுகள் எனக்கு உதவியது. இத்தகைய சமர்ப்பணம் நம் வாழ்வில் ஒழுங்கின்மையின் கதவுகளைத் திறப்பதற்கான அனைத்து வஞ்சக முயற்சிகளையும் முறியடிக்கும்.

எனவே, முடிவாக, ஒழுங்கின்மை ஒரு நபரின் வாழ்க்கையில் வஞ்சகத்தின் மூலம் நுழைகிறது என்று சொல்லலாம். எனவே, ஒழுங்கின்மை மற்றும் வஞ்சனை ஆகியவை ஒன்றுக்கொன்று நேரடியாக தொடர்புடையவை. ஆனால் சத்தியத்தை நேசிப்பதற்கான தீர்வை நாம் செய்தால், ஒழுங்கின்மையிலிருந்து நாம் பாதுகாக்கப்படுவோம், சத்தியம் நம்மை விடுதலையாக்கும். எனவே, நம் வாழ்வில் உள்ள வஞ்சகங்களிலிருந்து நாம் விடுபட கர்த்தரின் இரக்கம் மற்றும் கிருபைக்காக தேவனிடம் ஜெபம் செய்வோம்.

கர்த்தரின் கிருபையும் இரக்கமும் உங்களோடு இருப்பதாக