தலைப்பு :ஒரு உறவு என்பது மதத்திற்கு அப்பார்ப்பட்டது என்பதை தியானித்தல்
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக!. நீங்கள் தேவ சமாதானத்துடன் சிந்திக்கவும் தேவனாகிய கர்த்தருடன் நீங்கள் இன்னும் நெருங்கவும் இந்த தினசரி தியானம் உங்களுக்கு உதவியாக இருக்கும்படி அவருடைய சமூகத்தில் உங்களுக்காக ஜெபிக்கிறேன்.
நாம் அறிந்திருக்கிறபடி கிறிஸ்தவம் என்பது ஒரு மதமாகத்தான் இன்றும் எல்லாராலும் பார்க்கப்படுகிறது. ஆனால் சத்தியத்தின்படி கிறிஸ்தவம் என்பது விதிகளைப் பின்பற்றுவதோ, நமக்குள் இருக்கும் நமது பழைய முறைமைகளின் வழக்கத்தைப் பின்பற்றுவதோ அல்லது நம்முடைய சுயமுயற்சியினால் நம்மை நாமே சரி செய்வதோ அல்லாமல் நாம் இயேசு கிறிஸ்துவோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் உறவைப் பற்றியே குறிக்கிறது. தேவன் தம்முடைய ஜீவனை நமக்குள் நிரப்ப வேண்டும் என விரும்புகிறபடியால் நம்முடைய இருதயம் ஒழுங்கின்மையும், வெறுமையுமாய் இருக்கின்ற போது நம்முடைய புறம்பான அலங்காரத்தினை அவர் நம்மிடத்தில் விரும்புகிறதில்லை.
எரேமியா வாழ்ந்த நாட்களை சிந்தித்து பாருங்கள், அனனியா போன்ற கள்ளத்தீர்க்கதரிசிகள் புறம்பான விடுதலை மற்றும் செழிப்பினை மையமாக கொண்டு தேவனுடைய ஆசீர்வாதமானது நிர்ணயிக்கப்படுவதாக வலியுறுத்துகிறார்கள். ஆனால் எரேமியாவினுடைய தீர்க்கத்தரிசனமோ ஜனங்களை தேவனுடைய நோக்கத்திற்கு நேராக திருப்புகின்றதாகவும் மேலும் நம்முடைய மறுரூபப்படுதலானது உள்ளான இருதயத்திலிருந்து துவக்கப்பட்டு அத்துடன் நின்றுவிடாமல் வெளியரங்கமான மாற்றத்தினையும் கொடுக்கக்கூடியதாய் இருக்கிறது. இதுவே இன்றும் நம்முடைய வாழ்க்கைக்கும் தகுந்த சத்தியமாக இருக்கிறது. சுவிசேஷம் என்பது நம்முடைய சூழ்நிலைகள் மாறுவதைப் பற்றிக் குறிக்கவில்லை. இயேசு கிறிஸ்துவின் மூலமாக நம்முடைய சிந்தனைகள், விருப்பங்கள் மற்றும் நோக்கங்கள் மறுசீரமைக்கப்பட அல்லது புதுப்பிக்கப்பட வேண்டும் இந்த தொடர செயல்முறையானது தேவனுடைய ஆளுகையின் கீழ் நாம் முழுவதுமாக வரும்வரை நடைபெறும் என்பதை குறிக்கிறது.
இயேசு கிறிஸ்து இதை பற்றி மத்தேயு 12:43-45 -இல் எச்சரித்திருக்கிறார் “43 அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: 44. நான் விட்டுவந்த என் விட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி; அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, ஜோடிக்கப்பட்டதாகவும் இருக்கக்கண்டு, 45. திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியாருக்கும் சம்பவிக்கும் என்றார் “. நம்முடைய இருதயமானது சுத்தமாக காணப்பட்டாலும் அது வெறுமையாக இருக்கும் போது பிசாசு நம் இருதயத்திற்குள் எளிதில் வந்து தங்குவதற்கு வழிவகுக்கிறதாய் இருக்கிறது என்று கூறினார். அதுபோலவே கிறிஸ்தவம் என்பது நமக்கு வெறும் வெளிப்புற பழக்கவழக்கங்களாக இருக்கும்போது நம்முடைய இருதயம் அலங்கரிக்கப்பட்டு வெறுமையாக காணப்படுமாயின் பாதுகாப்பாற்ற வீட்டிற்கு ஒப்பாயிருக்கிறது. அதற்கு மாறாக இயேசு கிறிஸ்து நம்முடைய இருதயத்தில் வாசம்பண்ணுகையில் அவர் நமது பழைய காரியங்களை மாற்றுவதோடு மட்டுமல்லாமல் அவரைக் கொண்டு நம்மை நிரப்பி எல்லாவற்றையும் புதிதாக்குகிறார். இவைகளே முழுமையான மனந்திரும்புதல் ஆகும்.
இது நம்முடைய போராட்டங்களிலிருந்து விடுதலை பெறும் நோக்கத்தைப்பற்றி மட்டும் குறிக்கப்படவில்லை. தேவனாகிய கர்த்தர் தம்முடைய சாயலை நமக்குள் மீண்டும் உருவாக்குவதையே குறிக்கிறது. இது சீஷத்துவம் மூலம் எப்படி நடக்கிறது என்று பார்ப்போம். ஆரம்ப நாட்களில் சீஷர்கள் இயேசு கிறிஸ்துவோடு எப்படி நடந்தார்களோ, அது போலவே நாமும் அவருடைய சன்னிதியில் அவருக்காக நேரத்தை செலவிட்டு பக்திவைராக்கியம் நிறைந்த பழக்கவழக்கங்களை கற்றுக்கொண்டு மற்ற விசுவாசிகளோடு இணைந்திருந்து அவருடைய வார்த்தையைக் கைக்கொண்டு ஒவ்வொரு நாளும் அவருடைய சமூகத்தில் நம்மை முழுமையாக அர்ப்பணிக்கக் கற்றுக்கொள்வோம் இந்த செயல்முறையானது துரிதமாக நடந்து முடிந்துவிடாமல் நம்முடைய ஜீவனுள்ள நாள் மட்டும் இது தொடர்ச்சியாக நடக்கும் நிகழ்வு.
நம்முடைய பணத்தினாலும், ஜெயத்தினாலும், மனநிறைவினாலும் கர்த்தருடைய ஆசீர்வாதத்தை அளவிட முடியாது. உண்மையான ஆசீர்வாதம் என்பது இயேசு கிறிஸ்துவின் மூலம் நமக்குள் உருவாக்கப்படும் அவருடைய குணாதிசயமே ஆகும். அது இந்த உலகத்திலிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் எந்த காரியத்தை விடவும் மிகவும் மேன்மையானதாகும்.
இன்று உங்களை உற்சாகப்படுத்தும்படியாக சில காரியங்களை உங்களிடம் கூற விரும்புகிறேன். நீங்கள் இழந்தைவைகளைக் குறித்தோ அல்லது நீங்கள் எந்த காரியங்களில் மாற்றம் வரவேண்டும் என்று விரும்புகிறதை குறித்தோ ஒருபோதும் சிந்திக்க வேண்டாம். அதற்கு பதிலாக உங்களுக்குள் எல்லாவற்றையும் புதிதாக்குகிறவராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளாய் மகிழ்ந்து களிகூறுங்கள். அவரே உங்களுடைய மிகப்பெரிய அழியாத பொக்கிஷமாயிருக்கிறார் என்பதை உங்கள் இருதயத்தில் நினைவில் கொள்ளுங்கள்.
சிந்தனைக்கு:
“என் வாழ்க்கையில் எந்த இடங்களில் எல்லாம் நான் என் உள்ளான மாற்றத்தைவிட வெளிப்புற மாற்றத்தில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறேன்? நான் உண்மையாகவே இயேசு கிறிஸ்துவை என் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு இருக்கிறேனா? என் இருதயத்தில் அவருடைய ஆளுகை இருக்கும்படி எந்த இடங்களில் எல்லாம் அவரை அனுமதித்திருக்கிறேன்? நான் மற்றவர்களுக்கு முன்பாக நேர்த்தியான புறதோற்றத்தை மட்டும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேனா?
ஜெபம்:
என் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவே நீர் என்னை வெளிப்புறத்தில் மட்டும் சுத்திகரிக்காமல் எனக்குள் வாசம் செய்து என் உள்ளான மனுஷனை புது சிருஷ்டியாய் மாற்றுகிறவராய் இருக்கிறபடியால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். என்னுடைய புறம்பான ஆசீர்வாதங்களை நோக்கிப் பார்க்காமல் எனக்குள்ளான மனுஷனிலே மாறுதல் உண்டாவதையும் உமது ஜீவன் எனக்குள்ளாக வாசம் செய்வதையும் நான் அறிந்து நாளுக்கு நாள் உமக்குள் வளரும்படி எனக்கு உதவி செய்யும். நான் தினந்தோறும் உம்முடனே கூட நடக்கவும் என் இருதயத்தின் ஒவ்வொரு சிந்தனையையும் உம்முடைய சமூகத்தில் அர்ப்பணிக்கவும் எனக்குக் கற்றுத்தாரும்.
ஒவ்வொரு நாளும் உம்முடைய பிரசன்னத்தில் நான் மகிழ்ந்து களிக்கூரும்படி என்னை அரப்பணிக்கிறேன் இயேசு கிறிஸ்துவின் மூலம் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே ஆமேன்.
கற்றுக்கொள்ள
உண்மையான ஆசீர்வாதம் என்பது நம்முடைய சூழ்நிலைகளில் உண்டாகும் மாறுதல் அல்ல. ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவின் வாழ்க்கையானது நமக்குள்ளிருந்து துவக்கப்பட்டு வெளியரங்கமாக்கப்படுவதையே குறிக்கிறது.
(செப்டம்பர் மாதம் 2025 ஆம் ஆண்டு மத்தேயு 11:28 ஊழியத்தின் சார்பாக Rev. இம்மானுவேல் பால் அவர்கள் எழுதிய தினசரி வேத தியானத்தின் பிரதிபளிப்பு சகோதரி லல்லியால் மொழிப்பெயர்க்கப்பட்டது)