நினைவு கூறுகிற தேவன் 

Posted on November 22, 2025

Home Publications Posts நினைவு கூறுகிற தேவன் 

நினைவு கூறுகிற தேவன் 

அனுதின வேததியானம்: நினைவு கூறுகிற தேவன் 

வேத தியானக் குறிப்பு: உபாகமம் 31:6

வேதாகமம், அநேக நேரம், “தேவன் நினைவுக்கூர்ந்தார்” என்ற சொற்றொடரை உபயோகிப்பதை நாம் பார்க்கலாம். எல்லையற்ற ஜலப்பிரளயத்தில் நோவா மிதந்து கொண்டிருந்ததை தேவன் நினைவுக்கூர்ந்தார். இஸ்ரவேல், எகிப்தில் இருந்து கூக்குரலிட்டதை அவர் நினைவுக்கூர்ந்தார். நீண்ட காலமாக ஒரு குழந்தைக்கான ஏக்கத்தில் இருந்த ராகேலை அவர் நினைவுக்கூர்ந்தார். முதல் கண்ணோட்டத்தில், “நினைவுக்கூர்ந்தார்” என்பது தேவன் சில காலம் மறந்து இருந்திருக்கலாம் என்பதைப் போல தோன்றுகிறது. ஆனால், வேதாகமம், தேவன் “நினைவுக்கூர்ந்தார்” என்று சொல்லும் போது, அவர் தன்னுடைய மக்களை நோக்கி புதிய இரக்கத்துடனும் திட்டமான நடவடிக்கையோடும் கடந்து சென்றதைக் குறிக்கிறது. அது, “இனி, நான் உள்ளே நுழைகிறேன்.” என்று அவர் சொல்லுவதாக இருந்தது.

முக்கியமானவைகள் எவைகளோ அவைகளை மறந்து விடக்கூடாது என்ற முயற்சியில் நாம் அதிக ஆற்றலை செலுத்துகிறோம். ஆனால், முக்கியமானவைகளைப் பற்றிக் கொண்டு மற்றவைகளை கடந்து போக விடுவதற்கு நமக்கு உதவி செய்ய பரிசுத்த ஆவியானவர் ஒரு வழியை வைத்திருக்கிறார். நம்மை ஆழமாய் பாதித்த நம்முடைய பழைய காயங்கள், சட்ட ரீதியான குரல்கள், மற்றும் ஞாபகங்கள் மேல் நமக்கு இருக்கும் பிடியை அவர் தளர்த்துகிறார். சில நேரங்களில், நம்முடைய கடந்த கால துன்பங்களை பற்றி நமக்கு ஞாபக மறதி இருப்பதைப் போல் தோன்றலாம். ஆனால், இந்த ஞாபக மறதியும் ஒரு அமைதியான குணப்படுத்துதலின் ஈவாக மாறுகிறது.

ஆனால், தேவன் மறப்பாரோ? ஒரு பரிசுத்த ரீதியில், ஆம், அவர், நம்முடைய பாவங்களை “மறக்கிறார்.” அதாவது, நம்முடைய பாவங்களை பற்றி அவருக்கு இருக்கும் அறிந்து கொள்ளுதலை அவர் அழிக்க மாட்டார், ஆனால், நாம் செய்ததற்கு ஏற்றவாறு நம்மை கையாளாமல் இருக்கத் தெரிந்து கொள்வதின் நிமித்தம் அதை செய்கிறார். அவருடைய மறதி, நமக்கு கொடுக்கபடும் கிருபையாகும், அவருடைய குறைபாடு அல்ல.

ஆனால், மறுபுறமாக, நிவாரணமே இல்லாமல் அக்கினியாய் தோன்றும் சில காலங்களும் இருக்கின்றன. ஏசாயா, தேவனை, வெள்ளியையும் பொன்னையும் புடமிடுகிறவர் என்று வரையறுக்கிறார். அந்த அக்கினியில் நம்மை சுற்றி எதுவுமே மாறாதது போல் தோன்றுகிறது. அந்த அழுத்தம் நிலை நிற்கிறது. அந்த அக்கினி நிலை நிற்கிறது. வாழ்க்கை ஒரு இடத்தில் சிக்கிக் கொண்டதைப் போல் தெரிகிறது. அந்த தருணத்தில் தான் அநேக நேரம் தேவன் அங்கிருந்து வெளியேறி இருப்பதைப் போல் தோன்றுகிறது. ஆனால், புடமிடுகிற ஒருவர், உலோகத்தை எப்போதுமே கவனிக்காமல் விட மாட்டார். தன்னுடைய கண்களை அதின் மேல் நோக்கமாய் வைத்து தன்னுடைய சொந்த ரூபத்தை அதில் காணும் நேரம் வரைக்கும் காத்திருக்கிறார்.

இதுதான் “பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை” என்று உபாகமத்தில் இருக்கும் வாக்குத்தத்திற்க்கு பின்னாக இருக்கும் அர்த்தமாகும். இது, தேவனின் கவனம், ஒரு நிமிடத்திற்கு கூட சிதறவில்லை என்பதற்கான நினைவூட்டுதல் ஆகும். அவருடைய பிரசன்னம் அமைதியாக தோன்றினாலும் அது நிலையானதாகவும் அசையாததாகவும் இருக்கிறது. அவர் நம்மை வனைந்து கொண்டும் மெருகேற்றிக் கொண்டும் இருக்கிறார். பின்பு, உங்களுடைய வாழ்க்கையில் இருந்து அவருடைய குணாதிசயம் பிரகாசிக்கும் போது, தன்னுடைய சுத்திகரிப்பு அதன் வேலையை செய்து முடித்திருக்கிறது என்று அறிகிறார். அதன் பிறகு, அந்த அக்கினியில் இருந்து அவர் உங்களை தூக்கி எடுத்து அவருடைய மகிமைக்கு ஏதுவான ஒன்றாக உங்களை உருவாக்குகிறார். இப்போது அந்த அக்கினி கடுமையானதாக தோன்றினால் நீங்கள் கைவிடப்பட்டிருக்கிறீர்கள் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். அக்கினி என்பது நிராகரிப்பு அல்ல. அது, மறுரூபப்படுத்துவது. மற்றும், உங்கள் மேல் கண்ணோக்கமாய் இருக்கிறவர் இன்றும் உங்களை நினைவு கூறுகிறார்.

இன்றைய சிந்தனைக்கு:

தேவனுடைய அமைதி, அவர் இல்லாதிருக்கிறார் என்பது அல்ல. ஆனால், அது அக்கினியை விட்டு எப்போதுமே விலகாமல் இருக்கும் புடமிடுகிறவரின் நிலையான கண்காணிப்பு ஆகும். இன்று, நீங்கள் காணப்பட்டும், நினைவு கூறப்பட்டும், தாங்கப்பட்டும் இருக்கிறீர்கள் என்ற வாக்குத்தத்தில் இளைப்பாருங்கள். அவர், உங்களில் தொடங்கிய வேலையானது இன்னும் ஒரு நோக்கத்துடன் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை விசுவாசியுங்கள்.          

ஜெபம்:

           பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உமக்கு முன்பாக வருகிறோம். நாங்கள் காண்கிறதை வைத்து அல்லாமல் விசுவாசத்திலே நடக்க நீர் எங்களை அழைத்து இருந்தாலும், அநேக நேரம், எங்களுடைய கண்கள் உம்முடைய மகிமையையும் வல்லமையையும் பார்ப்பதில் குறைவுபட்டு, மாறாக, எங்களுடைய பலவீனங்களிலும், கடந்த கால காயங்களிலும், எங்களுடைய பயங்களிலும் நாங்கள் சார்ந்து இருந்திருக்கிறோம். ஒன்றும் இல்லாதவைகளில் இருந்து அனைத்தையும் உருவாக்குகிற தேவனாகிய கர்த்தர் நீரே என்பதை எங்களுக்கு மறுபடியுமாக கற்பித்தருளும். தேவனே, எங்களை நீர் ஆறுதல் செய்து உம்முடைய பலத்த கரத்தினால் எங்களை நிலை நிறுத்தும். இருளிலே நாங்கள் வெளிச்சமாய் பிரகாசிப்பதற்கு உம்முடைய குணப்படுத்துதல் எங்களுக்குள்ளாக கடந்து வருவதாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம், ஆமென்.

இன்றைக்கு கற்றுக்கொள்ள வேண்டியது:

தேவன் “நினைவு கூறுகிறது” என்பது அவர் அதுவரை மறந்திருந்தார் என்றதால் அல்ல. மாறாக, அவர் நமக்கு நேராக இக்கத்துடனும் நோக்கத்துடனும் ஒரு புதுப்பிக்கப்பட்ட செயல்பாட்டுடன் கடந்து வருவதை குறிக்கிறது. நம்முடைய வாழ்க்கையானது புடமிடும் அக்கினியைப் போல் தோன்றினாலும் தேவனுடைய பிரசன்னம் தொடர்ச்சியாய் நம்மை அவருடைய மகிமைக்காக வனைந்து பரிசுத்தப்படுத்துகிறதாய் இருக்கிறது. நமக்குள், ஞாபக மறதி என்பது சில நேரங்களில் நம்முடைய குணப்படுதலுக்காக தேவையானதாயும் இருக்கிறது. அது, நம்முடைய கடந்த கால வேதனைகளிலிருந்து நம்மை விடுவித்து குணப்படுத்துதல் நமக்குள் வேர் கொள்ளுவதற்கான ஒரு ஈவு. நாம் அநேக நேரம் அதை பார்க்காவிட்டாலும் தேவனுடைய கவனம் எப்போதுமே நம்மை விட்டு விலகுவதில்லை. அவருடைய அன்பு என்றைக்கும் குறையாததாயும் நம்மை கைவிடாததாயும் இருக்கிறது. இந்த அக்கினியானது நம்மை கைவிடுவதற்காக அல்லாமல் நம்மை மறுரூபப்படுத்துவதற்காகவே இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொண்டு இந்த செயல்பாட்டில் அவரை நம்பி இருப்பதற்காக  நாம் அழைக்கப்பட்டு இருக்கிறோம்.

(2025 நவம்பர் மாதம் 22 அன்று மத்தேயு 11:28 ஊழியத்தின் சார்பாக Rev. இம்மானுவேல் அருள் பால் அவர்கள் எழுதிய தினசரி வேத தியானத்தின் பிரதிபலிப்பு சகோதரி ஜெசிந்த் ஏஞ்சலால் மொழிப்பெயர்க்ப்பட்டது).

அறிவிப்புகள்:

  1. உங்களுடைய சீஷத்துவ பயணத்தில் நீங்கள் ஆதரவைத் தேடுகிறீர்கள் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி) நடைபெறும் எங்களுடைய வாராந்திர சீஷத்துவ கூடுகையில் சேர உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

இணைப்பு:https://us06web.zoom.us/j/81144235750pwd=RG4veEdLQkJNS1NxYW1ZWmNnb3EvQT09  (சந்திப்பு ஐடி (Meeting ID) : 811 4423 5750.  கடவுச்சொல் (Password): 12345). 

  1. தனிப்பட்ட ஆலோசனை பெறுவதற்கு எங்களைத் தொடர்புகொள்ளவும்.உங்களுடன்    விசுவாசத்திலும்  மற்றும்  ஐக்கியத்திலும்  நடக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம். 
  • எங்களுடைய ஊழியங்கள்    மற்றும்      கூடுகைகளை குறித்த  அறிவிப்புகளுக்கும்  மற்றும் தகவல் தொடர்புக்கும்  எங்கள் வாட்ஸ்அப் குழுவில் சேரவும்: https://chatwhatsapp.com/FQuH58GtkEEApPCm9gN8no
  • நேரடி ஆலோசனை பெற்றுக்கொள்ளநீங்கள் விரும்பினால்,கீழேஉள்ள இணைப்பை  உபயோகித்து   ஏற்பாடு செய்யுங்கள்https://scheduler.zoom.us/rev-immanuel-paul-appointment.