அனுதின வேத தியானம்: மோசடி செய்பவர்களை குறித்து கவனமாக இருங்கள்
என் குடும்பத்தினரே, நான் உங்களிடத்தில் ஒரு நிமிடம் வெளிப்படையாக பேசலாமா? இந்த வாரத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் என்னை அதிகமாக உலுக்கியது. என்னைப் போல் பாசாங்கு செய்து எவரோ ஒருவர் பேஸ்புக்கில் (Facebook) ஒரு போலி கணக்கை உருவாக்கி மக்களிடத்திலிருந்து என் பெயரில் பணம் வாங்கும் அளவிற்கு செயல்பட்டுள்ளார். இதயம் நொறுங்கும் வகையில் இதில் அநேகர் வஞ்சிக்கப்பட்டனர். நான் காலை விழித்தெழுந்து என்னுடைய செய்திகளை பார்த்த போது இச்சம்பவம் நடந்ததை நான் கண்டு என்னுடைய இருதயம் தோய்ந்து போனது. “ஏன் இது நடந்தது? ஏன் மக்கள் இத்தகைய காரியங்களுக்கு பலியாகிறார்கள்?” போன்ற எண்ணங்கள் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். இதைக் குறித்து ஒரு சகோதரர் சொல்லிய ஒரு கருத்து என்னை ஜெபத்திற்குள்ளாகவும் சிந்தனை செய்வதற்காகவும் நடத்தியது அந்த நேரத்தில் வந்த இந்த தியான செய்தியை உங்களிடத்தில் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இதில் மெய்யான காரியம் இதுதான்: மோசடி செய்பவர்கள் கொம்புடனும் கையில் மண் கோரி போன்ற கருவியுடனும் வர மாட்டார்கள். அப்படி அவர்கள் வருவார்கள் என்றால் நாம் அவர்களை எளிதாக கண்டுகொள்ள முடியும். ஆனால், பிசாசைப் போலவே, அவர்கள் ஒளியை போல் இருக்கும் ஒரு வஞ்சகத்தை போர்த்தி கொண்டு வருவார்கள். அதாவது, பார்வைக்கு சரியாகவும், கேட்பதற்கு சரியாகவும், நம்புவதற்கு பெரும்பாலும் ஏற்றதாகவும் தோன்றும் ஒரு பாவனையில் வருவார்கள். வேதாகமம், பிசாசு ஒளியின் தூதன் போல் வேஷம் தரித்து வருவான் என்று கூறுகிறது. அதாவது, மெய்யான தேவனின் பிரகாசமான ஒளியாக அல்லாமல் ஒரு காவல் காக்கப்படாத இருதயத்தை வஞ்சிக்க கூடிய ஒரு மங்கலான போலியான ஒளியாக வருகிறான்.
அப்படியெனில், இதற்கு நாம் ஏன் சில நேரங்களில் விழுந்து போகிறோம்? நாம் முட்டாள்களாய் இருப்பதினாலோ அல்லது கவனக்குறைவாக இருப்பதினாலோ அல்ல. மாறாக, அது, அந்த நேரத்தில் இயேசுவோடு இருக்கும் நம்முடைய ஐக்கியம் ஆழமாகவோ, நிலையாகவோ, அல்லது செயல்பாட்டிலோ இருக்க வேண்டிய நிலையில் இல்லாமல் இருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பாக இதை ஏதேன் தோட்டத்திலும் நாம் காண முடிகிறது. ஆதாமும் ஏவாளும் தேவனோடு அனுதினமும் ஐக்கியமான பிணைப்பில் நடப்பதற்காக ஒரு தோட்டத்தை தேவன் உருவாக்கினார். ஆனால், “அறிவு” என்ற வேஷத்தில் வஞ்சனை வந்த போது அவர்கள் அந்த ஐக்கியத்தில் சார்ந்திருக்கவில்லை. அடிப்படையாக, “இது, உங்களுடைய வாழ்க்கையை மேன்மைப்படுத்தும்.” என்று சர்ப்பம் அவர்களிடத்தில் சொல்லியது. இந்தக் குறிப்பு, கேட்பதற்கு நன்கு அறிந்ததாக இருக்கிறதா?
உலகமும் இன்னும் இதே வாக்கியங்களை தான் நுண்ணியமாக சொல்லிக்கொண்டே இருக்கிறது. ” இங்கு வா, இது உன்னுடைய வாழ்க்கையை மேம்படுத்தும்.” “இதை செய்து பார். இதைத்தான் நீ இவ்வளவு நாள் இழந்து போய் இருக்கிறாய்.” “மெய்யான ஞானம் இதுதான்.” ஆனால், இயேசு இதற்கு மாறாக முற்றிலுமான வேறு ஒரு பாதைக்கு நம்மை அழைக்கிறார். “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.” என்று சொல்லுகிறார். நாம் அநேக நேரம், காணிக்கை கொடுப்பது, தசம பாகம் செலுத்துவது, வேதம் வாசிப்பது, சடங்காச்சாரமாக ஜெபிப்பது, மற்றும் சபை ஆராதனைகளுக்கும் சுவிசேஷ கூட்டங்களுக்கும் செல்வது போன்ற பக்திக்கு ஏதுவான செயல்களை தேவனுடனான ஐக்கியமான உறவை கொள்வதற்கு பதிலாக கையாளுகிறோம். இவைகள் நமக்கு மன ரீதியாக ஒரு ஆறுதலை தருவது போல் தோன்றுவதினால் இவைகளை செய்கிறோம். கவலைக்கிடமாக, இந்த பழக்கங்களே ஒருவரின் வாழ்க்கைக்குள்ளாக மோசடி செய்பவர்கள் நுழைவதற்கு உகந்தவைகளாக மாறுகின்றன. இந்த வஞ்சனை மோசடிகளாய் மற்றும் வருபவை அல்ல. அது, மாம்சத்திற்கு ஆறுதல் தரும் சோதனைகள் மூலமாகவும் வருகிறது. மது அருந்துதல், புகைபிடித்தல், ஆபாச காட்சிகளை பார்த்தல் அல்லது வாசித்தல், கட்டுப்படுத்த முடியாத கோபம், கசப்பு, குற்றப்படுத்துதல், மற்றும் அனைத்து விதமான அழிவிற்கான பழக்க வழக்கங்களாக இருக்கலாம். இவை சிற்றின்பம், நிவாரணம், ஒரு சூழ்நிலையில் இருந்து மனரீதியாக பிரிக்கப்பட்டு தப்பிப்பதற்கு, அல்லது “இன்னும் ஒரே முறை மாத்திரம்” போன்றவைகளாக வேஷம் தரித்து வருகின்றன. ஆனால், இதற்கு கீழாக அவைகள் ஆத்துமாவைக் கட்டுப்படுத்த விரும்புகின்றன, விடுதலை செய்ய அல்ல.
குடும்பத்தினரே, உங்களுக்கான மெய்யான அழைப்பு இதுதான்: குறுக்கு வழியில் ஒரு மேம்படுத்தப்பட்ட நல்ல வாழ்க்கைக்காக வாக்குத்தத்தம் பண்ணப்படும் அறிவை நாடாதீர்கள். பரிசுத்த ஆவியானவரோடு கிட்டி சேர்ந்து இருங்கள். தேவனுடைய சரீரமான விசுவாசிகளின் கூடுகையில் வேரூன்று இருங்கள். நாம் ஒன்றாக நடக்கும் போது, ஒன்றாக வளரும் போது, ஒன்றாக ஜெபிக்கும் போது, மற்றும் பரிசுத்த ஆவியானவருடன் ஒரே நிலையில் இருக்கும் போது தேவனுடைய ராஜ்யம் என்பது நாம் வெறுமென பேசும் ஒரு காரியமாக அல்லாமல் நாம் மெய்யாகவே வாழ்வதாக மாறுகிறது.
மேலும், நீங்கள் சமீபத்தில் வஞ்சிக்கப்பட்டு, வேதனைப்படுத்தப்பட்டு, அல்லது தவறாக வழிநடத்தப்பட்டு இருப்பீர்கள் என்றால் நான் சொல்லுவதை தயவு செய்து கேளுங்கள். அவமானமோ வெட்கமோ படாதிருங்கள். அது, தேவனை விட்டு உங்களை தள்ளுவதாக அல்லாமல் அவருடன் உங்களை கிட்டி சேர்ப்பதாக இருக்கட்டும். இயேசுவுடன் நாம் வைக்கக்கூடிய ஆழமான ஐக்கியம் அவரின் இரத்தத்தின் மூலமாக வாங்கப்பட்டும் உறுதிப்படுத்தப்பட்டும் இருப்பதினால் நமக்கு அதற்கு முழு அங்கீகாரம் இருக்கிறது. எந்த ஒரு மங்கலான போலியானதும் நம்மை இனி ஏமாற்றாத படி நாம் அவருடைய மெய்யான ஒளியின் அருகிலே நிற்போமாக.
இன்றைய சிந்தனைக்கு:
இயேசு கிறிஸ்து, ஏற்கனவே பிசாசையும் அவனுடைய அனைத்து திட்டங்களையும் கல்வாரியின் சிலுவையிலே வெற்றி சிறந்தார் என்று இன்றைக்கு நான் நினைவு படுத்தப்படுகிறேன். இருப்பினும் விசுவாசிகளாக நாம் சில நேரங்களில் சத்துருவின் கண்ணியில் சிக்கிக் கொள்கிறோம். இது அவன் பலனானவன் என்பதால் அல்ல, ஆனால், நாம் தொடர்ச்சியாக இயேசு கிறிஸ்துவுடன் ஐக்கியத்தில் நெருக்கமாக இல்லாமல் இருப்பதினால். இந்த உலகம், நம்மை எளிதான முறையில் வெற்றி கொள்ள, துரிதமாக சந்தோஷத்தை பெற்றுக்கொள்ள, மற்றும் பலருக்குக் கிடைக்காத இரகசிய அறிவை பெற்றுக்கொள்ள வாக்களித்து நம்மை ஆசை காட்டுகிறது. ஆனால் இவைகள் எல்லாம் அவருடைய சத்தியத்தில் இருந்து நம்மை கவனம் சிதற வைக்கிறவைகள். இயேசு கிறிஸ்துவுடன் நாம் ஐக்கியமாக பிணைக்கப்பட்டு அவருடைய பிரசன்னத்தில் அனுதினமும் நடப்பது நம்மை வஞ்சனைகளை கண்டு கொள்ளவும் அவர் ஜெயித்து பெற்ற வெற்றியை வாழவும் நம்மை தகுதிப்படுத்துகிறது. ஆகவே, நம்முடைய பெலனும், ஒளியும், அசைக்க முடியாத கோட்டையுமாக இருக்கும். இயேசு கிறிஸ்துவை நாம் பற்றிக் கொள்வோமாக.
ஜெபம்:
பரலோகத்தில் இருக்கும் பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உமக்கு முன்பாக வருகிறோம். நீர் ஒருவரே எங்களை அனைத்து கண்ணியில் இருந்தும் தீய திட்டங்களில் இருந்தும் பாதுகாக்கிறவராய் இருக்கிறீர். ஆனால், அநேக நேரம், நீர் எங்களுடைய வாழ்க்கையை தீமையிலிருந்தும் அழிவிலிருந்தும் வஞ்சனையிலிருந்தும் எண்ணற்ற நேரங்களில் பாதுகாத்து வைத்திருப்பதை நாங்கள் அங்கீகரிக்கவும் அதற்காக நன்றி சொல்லவும் மறந்து விடுகிறோம். நீர் எப்பொழுதும் எங்களுடைய வழிநடத்தும் ஒளியாய், மீட்பராய், மற்றும் இரட்சகராய் இருக்கிறீர். இரட்சணியத்தின் சந்தோஷத்தில் நாங்கள் பாதுகாக்கப்பட்டு இருக்கும்படியாக உம்முடைய செட்டைகளின் கீழ் அடைக்கலம் பெற எங்களுக்கு உதவி செய்யும். மேலும், நாங்கள் புரிந்து கொள்ளாமல் ஜெபம் செய்யும் பொழுதோ அல்லது நடந்துகொள்ளும் பொழுதோ எங்களை உம்முடைய கிருபையின் அன்பிலே நினைவுகூர்ந்து எங்களுடைய அர்ப்பணிப்பை ஏற்றுக்கொண்டு உம்மோடு கிட்டி சேர்ப்பீராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம், ஆமென்.
இன்றைக்கு கற்றுக்கொள்ள வேண்டியது:
வஞ்சனையானது, அநேக நேரம், கவர்ச்சிகரமாகவும் நம்பத்தக்கதாகவும் அல்லது ஒளி நிறைந்ததாகவும் காணப்படுகிறது. ஆனால், நம்முடைய இருதயங்கள் இயேசு கிறிஸ்துவை விட்டு தூரமாய் இருக்கும்போது மட்டுமே சத்துருவின் திட்டங்கள் பலிக்கின்றன. ஜெபம், வேதம் வாசித்தல், மற்றும் ஐக்கியம் கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் இயேசு கிறிஸ்துவுடன் நாம் வைக்கும் அனுதின நெருக்கமே நம்முடைய பகுத்தறியும் தன்மையை கூர்மைப்படுத்தி பொய்யானவைகளில் இருந்து நம்மை பாதுகாத்து மெய்யான ஒளியிலே தொடர்ந்து நடக்க வைக்கின்றது. குறுக்கு வழிகள் அல்லது துரிதமாக ஆதாயம் பெற்றுக் கொள்ளும்படியான வாக்குத்தத்தங்கள் மூலமாக ஈர்க்கப்படும் போது, சற்று ஓய்ந்திருங்கள், இயேசு கிறிஸ்துவின் மேல் சார்ந்து இருங்கள், மற்றும் அவருடைய பிரசன்னத்தில் வேரூன்றி நில்லுங்கள்.
(2025 டிசம்பர் மாதம் 06 அன்று கேள் மத்தேயு 11:28 ஊழியத்தின் சார்பாக Rev. இம்மானுவேல் அருள் பால் அவர்கள் எழுதிய தினசரி வேத தியானத்தின் பிரதிபலிப்பு சகோதரி ஜெசிந்த் ஏஞ்சலால் மொழிப்பெயர்க்ப்பட்டது).
அறிவிப்புகள்:
1.உங்களுடைய சீஷத்துவ பயணத்தில் நீங்கள் ஆதரவை தேடுகிறீர்கள் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி) நடைபெறும் எங்களுடைய வாராந்திர சீஷத்துவ கூடுகையில் சேர உங்களை நாங்கள் அன்புடன் அழைக்கிறோம்.
இணைப்பு: https://us06web.zoom.us/j/81144235750pwd=RG4veEdLQkJNS1NxYW1ZWmNnb3EvQT09 (சந்திப்பு ஐடி (Meeting ID) : 8114423 5750. கடவுச்சொல் (Password): 12345).
- தனிப்பட்ட ஆலோசனை பெற்றுக் கொள்ள நீங்கள் விரும்பினால் இந்த இணைப்பை உபயோகித்த தயவாக ஏற்பாடு செய்யுங்கள். https://scheduler.zoom.us/rev-immanuel-paul/appointment
- எங்களுடைய ஊழியங்கள் மற்றும் கூடுகைகளை குறித்த அறிவிப்புகள் மற்றும் தகவல் தொடர்புகளை பெற்றுக் கொள்ள எங்களுடைய வாட்ஸ்அப் (WhatsApp) குழுவில் சேர உங்களை அழைக்கிறோம் https://chat.whatsapp.com/K8DxEhNz9cn6xW12gKBVL0?mode=wwt உங்களுடன் விசுவாசத்திலும் ஐக்கியத்திலும் நடக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்.