அனுதின வேத தியானம்: தேவனுடைய பாதுகாப்பு என்றால் என்ன?
வேத தியானக் குறிப்பு : சங்கீதம் 121:8 யெகோவா உங்களை எல்லாத் தீங்கினின்றும் விளக்கி காப்பார்; / அவர் உங்கள் ஆத்துமாவைப் பாதுகாப்பார்.
“தேவன் நம்மைப் பாதுகாப்பார்” என்று மக்கள் பொதுவாக சொல்வார்கள், தெரியுமா? ஆனாலும், வாழ்க்கையானது இன்னும் ஏன் வேதனையாக இருக்கிறது? நாம் நம் அன்றாட வாழ்க்கையில் மக்களை இழக்கிறோம், போராட்டங்களை சந்திக்கிறோம், உலகிலுள்ள தீமைகளை காண்கிறோம். ”அப்படியானால், தேவன் உண்மையில் எதிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறார்?” என்று நம்மை சிந்திக்க வைக்கிறது. நீங்கள் வேதத்தை நீதானமாகப் பார்க்கும்போது அது உண்மையில் மூன்று விஷயங்களின் அடிப்படையில் வருகிறது. அவைகள்: மரணம், பிசாசு மற்றும் தீமை.
முதலாவதாக, நம்மில் பெரும்பாலோர் மரணம் நிகழ்வதை இருப்பதிலேயே மிகவும் மோசமான விஷயமாக பார்க்கிறோம். ஆனால், இயேசுவுக்கு சொந்தமான ஒருவருக்கோ மரணம் என்பது முடிவு அல்ல. அது உண்மையில் ஒரு நுழைவாயிலாக இருக்கிறது. இயேசு கிறிஸ்து மரித்து மீண்டும் உயிர்த்தெழுந்தார். அப்படியென்றால், மரணம் என்பதற்கு இனிமேல் இறுதி வாக்குரிமை இல்லை. நிச்சயம், எல்லோரும் ஒரு நாள் மரணத்தை எதிர்கொள்ள தான் போகிறோம். ஆனால், நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருப்பீர்களானால் அதைக் குறித்து பயப்பட வேண்டியதில்லை. நாம் சரீர ரீதியாக மரிப்பதை அநேக நேரம் தேவன் தடை செய்யாமல் இருந்தாலும் நம்மை அதின் பயத்தில் இருந்து பாதுகாக்கிறார். “மரணம் என்பது தோல்வி அல்ல, அது நம்முடைய நித்திய வாசஸ்தலத்திற்கு செல்வது” என்று நாம் சொல்லக்கூடியதாய் இருக்கிறது. இது ஒரு மகத்தான காரியம் ஆகும்.
இரண்டாவதாக இயேசு, மரணத்தை மட்டும் ஜெயங்கொள்ளவில்லை, பிசாசையும் தோற்கடித்தார். சில நேரங்களில் நாம் நம்முடைய சிந்தையில் சத்துருவிற்கு அதிக பலத்தை கொடுக்கிறோம். நாம் சோதிக்கப்படும்போது, குழப்பமடையும்போது அல்லது ஆவிக்குரிய விஷயங்களில் தாக்கப்படும்போது நாம் உறுதியாக நின்று, “நான் இயேசுவைச் சேர்ந்தவன் – நான் அவருடைய இரத்தத்தால் மூடப்பட்டிருக்கிறேன்.” என்று சொல்ல முடியும். இதை பிசாசு வெறுக்கிறான். மாறாக, பயம் மற்றும் சந்தேகத்தின் மூலமாக நாம் அவனுக்கு இடம் கொடுப்பதை அவன் தக்க வைத்துக் கொள்கிறான். கடிக்க இயலாத பாம்பைப் போல சாத்தான் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டுள்ளான். நாம் நம்மில் பலம் உள்ளவர்களாக இருப்பதன் மூலம் அல்ல, மாறாக, நாம் யாரைச் சேர்ந்தவர்கள் என்பதை நினைவில் கொள்வதன் மூலமே அவனை எதிர்த்து நிற்கிறோம்.
இறுதியாக, தீமை என்பது எப்போதும் வெளிப்படையானதாகவே இருக்காது. அது, நாம் சில நேரங்களில் இயேசுவை விட்டு சிறிதளவு விலகிப் போகும் போதும் ஒரு அமைதியான வெறுமையை நாம் உணர்வதாயும் இருக்கிறது. ஆனால், அதில் இதுதான் சிறந்த பங்கு – அதாவது, நாம் அங்கேயே சிக்கிக் கொள்வதில்லை. இயேசுவே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார். நாம் அவரைப் பற்றிக் கொள்ளும் போது வெளிச்சமானது இருளை பின் தள்ளுகிறது. ஆத்துமாவைப் பாதுகாத்துக் கொள்வது என்பது கோபத்துடனோ அல்லது பழிவாங்குவதற்காகவோ சண்டை போடுவது அல்ல. அது, பொய்களுக்கு “இல்லை” என்று பதில் அளித்து தேவனுடைய சத்தியத்தை அதற்கு மாறாக தெரிந்து கொள்வதாகும். தானியேலை குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். யோசேப்பை குறித்து சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் கசப்புடன் எதிர்த்து சண்டை போடவில்லை. அவர்களின் அநீதியான காலங்களில் அவர்கள் தேவனை நம்பினார்கள். சரியான நேரத்தில், தேவன் அவர்களை தூக்கி எடுத்தார். அதே தேவன் உங்கள் மேலும் இப்போது கண்ணோட்டமாய் இருக்கிறார். உங்கள் ஆத்துமாவை பாதுகாக்க அவர் பலன் உள்ளவராய் இருக்கிறார். அவர் உங்களை அவருடன் நடப்பதற்காக மட்டுமே அழைக்கிறார். எனவே, இருளானது கிசுகிசுக்கும் போது அதனுடன் ஒத்துக் கொள்ளாதீர்கள். உங்களுடைய கண்களை இயேசுவுக்கு நேராக திருப்பி, அவர் அந்த பாரத்தை சுமக்க அனுமதியுங்கள்.
இன்றைய சிந்தனைக்கு:
வாழ்க்கையானது நிச்சயமற்றதாகவும், பாரமானதாகவும், நிர்ணயிக்க முடியாததாகவும் இருக்கலாம். ஆனால், தேவனுடைய பாதுகாப்பு நாம் உணர்வதற்கு மேலாக ஆழமாக செல்கிறது. அவர் நம்முடைய ஆத்துமாக்களை பாதுகாக்கிறார். கிறிஸ்துவுக்குள், மரணம் முடிவு அல்ல, பிசாசிற்கு அதிகாரம் கிடையாது, மற்றும் தீமை ஜெயிக்க முடியாது. ஒருவேளை தற்போது வாழ்க்கையானது செம்மையாய் இல்லாதிருக்கலாம். யாரும் காணக் கூடாத கேள்விகளையும் பயங்களையும் போராட்டங்களையும் நீங்கள் தாங்கிக் கொண்டு இருக்கலாம். ஆனால், நீங்கள் பாதுகாக்கப்படாமல் இல்லை. நீங்கள் தனிமையாய் இல்லை. தேவன் பயத்தை விட அருகாமையில் இருக்கிறார், சத்ருவை விட பலமானவராய் இருக்கிறார், மற்றும் இருளை விட வெளிச்சமானவராய் இருக்கிறார்.
ஜெபம்:
பரமண்டலங்களில் இருக்கும் எங்கள் பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உமக்கு முன்பாக தாழ்மையான இருதயங்களுடன் நாங்கள் வருகிறோம். அநேக நேரம் நீர் எங்களுக்கும் எங்களுடைய ஆத்மாக்களுக்கும் கொடுக்கும் பாதுகாப்புக்காகவும் நீர் எங்களுக்கு வாக்குதத்தம் பண்ணின நித்திய ஜீவனுக்காகவும் நன்றியோடு இருக்க மறந்து விடுகிறோம். நாங்கள் எங்களுடைய வியாதிகளிலும் போராட்டங்களிலும் மற்றும் இந்த உலகத்தின் சோதனைகளிலும் சிக்கிக் கொண்டு உம்முடைய கரிசனையையும் இரக்கத்தையும் கண்டு கொள்வதில் தோல்வி அடைகிறோம். ஆனால், வாழ்க்கையானது கடினமாய் இருந்தாலும் நீர் உண்மையுள்ளவராய் இருக்கிறீர். பேதுருவின் விசுவாசம் ஒழிந்து போகாத படி இருக்க நீர் ஜெபித்தது போலவே எங்களுடைய விசுவாசத்தை நீர் பலப்படுத்தி, எங்களுடைய இருதயத்தை பாதுகாத்து, உம்முடைய அதிகாரத்திலும் தெய்வத்துவத்திலும் நாங்கள் முழுமையாக நம்பி இருக்க உதவி செய்யும்படியாக கேட்டுக்கொள்கிறோம். தேவனே, நீர் எங்களை உம்மோடு கிட்டி சேர்த்து கொண்டு உம்முடைய ஆவி எங்களை வழி நடத்தி பாதுகாப்பதாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் ஜெபித்து இதை ஒப்புக்கொடுக்கிறோம். ஆமென்.
இன்றைக்கு கற்றுக் கொள்ள வேண்டியது:
தேவன் நம்மை பாதுகாப்பது என்பது வாழ்க்கை எப்போதும் இலகுவானதாக இருக்கும் என்பது அல்ல. ஆனால், அது, நம்முடைய ஆத்துமா அவரில் பாதுகாப்பாய் இருக்கிறது என்று அர்த்தமாகும். மரணம் நம்முடைய முடிவு அல்ல. பிசாசு நம்மை உரிமை கோர முடியாது. மேலும், கிறிஸ்துவுக்குள் நாம் கொண்டிருக்கும் ஒளியை பிசாசு மேற்கொள்ள முடியாது. இயேசுவோடு நெருங்கி இருங்கள். அவருடைய பிரசன்னம் உங்களின் சமாதானமாய் இருப்பதாக.
(2025 டிசம்பர் மாதம் 13 அன்று கேள் மத்தேயு 11:28 ஊழியங்கள் சார்பாக Rev. இம்மானுவேல் அருள் பால் அவர்கள் எழுதிய தினசரி வேத தியானத்தின் பிரதிபலிப்பு சகோதரி லல்லி மற்றும் ஜெசிந்த் ஏஞ்சலால் மொழிப்பெயர்க்ப்பட்டது).
அறிவிப்புகள்:
1.உங்களுடைய சீஷத்துவ பயணத்தில் நீங்கள் ஆதரவை தேடுகிறீர்கள் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி) நடைபெறும் எங்களுடைய வாராந்திர சீஷத்துவ கூடுகையில் சேர உங்களை நாங்கள் அன்புடன் அழைக்கிறோம்.
இணைப்பு: https://us06web.zoom.us/j/81144235750pwd=RG4veEdLQkJNS1NxYW1ZWmNnb3EvQT09 (சந்திப்பு ஐடி (Meeting ID) : 8114423 5750. கடவுச்சொல் (Password): 12345).
- தனிப்பட்ட ஆலோசனை பெற்றுக் கொள்ள நீங்கள் விரும்பினால் இந்த இணைப்பை உபயோகித்த தயவாக ஏற்பாடு செய்யுங்கள். https://scheduler.zoom.us/rev-immanuel-paul/appointment
- எங்களுடைய ஊழியங்கள் மற்றும் கூடுகைகளை குறித்த அறிவிப்புகள் மற்றும் தகவல் தொடர்புகளை பெற்றுக் கொள்ள எங்களுடைய வாட்ஸ்அப் (WhatsApp) குழுவில் சேர உங்களை அழைக்கிறோம் https://chat.whatsapp.com/EokMFGuZdgb23Sg8BsHzas உங்களுடன் விசுவாசத்திலும் ஐக்கியத்திலும் நடக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்.
.