அனுதின வேத தியானம்: தேவனின் “ஆம்” மற்றும் “ஆமேன்”
வேத தியானக் குறிப்பு : 2 கொரிந்தியர் 1 : 20 “எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.”
இன்றைக்கு, நான் உங்களோடு சேர்ந்து தேவனுடைய வாக்குத்தத்தங்களின் வல்லமையையும் அர்த்தத்தையும் ஒரு புதிய கண்ணோட்டத்தில் இருந்து தியானிக்க விரும்புகிறேன். தேவனுடைய வாக்குத்தத்தங்கள் உறுதியற்றவையோ அல்லது முரண்பாடானவையோ அல்ல. கிறிஸ்துவில், அவருடைய பதில் உறுதியானதும் முழுமையானதுமான ஆம் என்றே இருக்கிறது. நாம் ஆமென் என்று பதிலளிக்கும்போது, “உண்மையாகவே, அப்படியே ஆகட்டும், அது நிறைவேறட்டும்” என்று அறிவிக்கிறோம். ஆமென் என்பது நம்முடைய ஒப்பந்தத்தின் வார்த்தையாகும். அதாவது, அது தேவனின் உண்மை தன்மையின் மேல் இருக்கும் நம்முடைய நம்பிக்கையின் முத்திரை ஆகும்.
மேலிருக்கும் இந்த வசனத்தில் இருக்கும் நுட்பமான ஆனால் வல்லமையான பகுதி இதுதான்: தேவனுடைய அனைத்து ஆம் என்பவைகள் அவரிலேயே உள்ளன; எல்லா ஆமென் என்பதும் அவரினாலேயே வருகிறது; இவை அனைத்தும் தேவனுடைய மகிமைக்காகவே உண்டானவை.
அவரில் – தேவனுடைய வாக்குத்தத்தங்கள் குறைபாடு உள்ளவைகளாகவோ அல்லது நோக்கம் இல்லாமல் சிதறடிக்கப்பட்டோ இருப்பதில்லை. அவை, கிறிஸ்துவை மையமாகக் கொண்டுள்ளன. நம்முடைய நம்பிக்கை, விசுவாசம், மற்றும் மகிழ்ச்சி ஆகியவை அவரிலே உறுதியாக பதியப்பட்டுள்ளன.
அவர்மூலமாக — தேவனுடைய “ஆமென்” வெறும் ஒரு சொல்லாக மட்டும் இருப்பது அல்ல. அது நம்முடைய வாழ்க்கையின் நடைமுறையில் உண்மையாக செயல்படுவதாகும். கிறிஸ்துவின் மூலமாக தன்னுடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதற்காக அவர் செயல்படுகிறார். ஆசீர்வாதங்களும், வழிநடத்துதலும், மறுரூபமாக்கப்படுதலும் அவர்மூலமாகவே பெருகி வருகின்றன.
தேவனுடைய மகிமைக்காக —தேவன் செய்கிற ஒவ்வொரு செயலும், அவர் உரைக்கிற ஒவ்வொரு “ஆம்” மற்றும் “ஆமென்” என்பதும் இறுதியில் அவருடைய மகிமையையே வெளிப்படுத்துகின்றன. நம்முடைய வாழ்க்கையானது அவருடைய உண்மைத் தன்மையை வெளிப்படுத்திக் காட்டும் கருவியாய் இருக்கின்றது.
அங்கீகரிக்கப்படுவதா அல்லது மறுரூபமாகப்படுவதா?
பெரும்பாலும், நாம் ஏற்கனவே வேண்டும் என்று நினைத்து விரும்புவதை தேவன் வெறுமென அங்கீகரிப்பார் என்று நம்பிக்கையோடு ஜெபிக்கிறோம். அவர் தலையசைத்து, “ஆம், தொடர்ந்து செய்” என்று சொல்லுவாரென நாம் ஏங்குகிறோம். ஆனால், தேவனுடைய இருதயம் நம்முடைய விருப்பங்களை வெறும் உறுதிப்படுத்துவதற்காக அல்ல — நம்மை மறுரூபப்படுத்துவதே அவருடைய நோக்கமாக இருக்கிறது. அவருடைய வாக்குத்தத்தங்கள் நாம் எப்படி இருக்க வேண்டுமோ அத்தகைய மக்களாக வனையப்படுவதற்கு ஏதுவாகவே இருக்கின்றன. சில நேரங்களில், அவருடைய “ஆம்” உடனடியாக நம்மை மகிழ்ச்சியடையச் செய்யக்கூடிய ஒன்றாய் இருப்பதில்லை; ஆனால், அது நம்மை உண்மையில் நன்மையானவர்களாய் இருக்கவும், நமது குணாதிசயத்தை சுத்திகரிக்கிறதாகவும், மற்றும் அவரோடு நம்மை இன்னும் கிட்டி நெருங்கச் செய்கிறதாயும் இருக்கிறது.
எல்லா நல்ல உணர்வுகளும் நன்மையானவை அல்ல
உணர்வுகள் தந்திரமானவை. நீதிமொழிகள் 14:12 “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரணவழிகள்.” என்று எச்சரிக்கிறது. நாம் நல்லதாய் உணர்கிற அனைத்துமே எப்போதும் நன்மையானதல்ல. நம்முடைய உணர்வுகள் நம்மைத் தவறாக வழிநடத்தலாம்; ஆனால், தேவனுடைய வார்த்தையோ நிலையானதும், மாறாத உண்மையுமாயிருக்கிறது. அவருடைய ஆம் என்பது நமது நிலையற்ற விருப்பங்களில் வேர் கொண்டு அல்லாமல் அவருடைய பரிபூரண ஞானத்தில் வேரூன்றி இருக்கிறது.
தேவனால் அருளப்பட்ட வேத வாக்கியங்கள்
வேதாகமத்தின் ஒவ்வொரு வார்த்தையும் தேவனுடைய உயிர் மூச்சாகும் (2 தீமோத்தேயு 3:16). ஒவ்வொரு வாக்குத்தத்திற்கும் ஒரு குறிப்பான நோக்கம் இருந்தது. ஒவ்வொரு சத்தியமும் ஜீவன் உள்ளதாயும் செயல்முறையில் உள்ளதாயும் இருக்கிறது. ஏசாயா 55:11 இவ்வாறு நம்மை நினைவூட்டுகிறது: அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். தேவனுடைய ஆம், அவருடைய வாக்குத்தத்தங்களில் காணப்பட்டவைகளின் மூலமாக நாம் முற்றிலும் புரிந்து கொள்ளாவிட்டாலும் நம்முடைய வாழ்க்கையில் முக்கியமாக நிலைத்திருக்கும் நன்மையை நிறைவேற்றுகிறார்.
தேவனுடைய ஆவியினால் மறுரூபமாக்கப்பட்ட ஒரு ஆத்துமா
மெய்யான காரியம் இதுதான் – மாம்சத்தில் குறைபட்ட நிலைமையில் நாம் வாழுவதினால் நம்முடைய ஆத்துமாவினால் தேவனுடைய ஆம் என்பதை முழுவதுமாக புரிந்து கொள்ள முடியாது. அவருடைய “ஆமேன்” எப்போதுமே உடனடியான திருப்தியையும் சிற்றின்பத்தையும் கொடுக்காது. சில நேரங்களில் அது ஒரு சிட்ச்சையாகவும் சீர்திருத்துதலாகவும் தோன்றலாம். ஆனால் இதுதான் நம்முடைய ஆத்துமாவிற்கு சரியாக தேவைப்பட்டதாகும். தேவனுடைய உடன்படிக்கை, நம்மை அழிக்கக்கூடிய நம்முடைய வாஞ்சைகளிலிருந்து நம்மை விடுதலையாக்கவும், நமக்கு தீங்கு உண்டாக்கக்கூடியவைகளிலிருந்து நம்முடைய ஏக்கத்தை திருப்புவதும், மற்றும் நித்திய சந்தோஷத்திற்குள் நம்மை நடத்துவதற்காகவும் இருக்கிறது. “ஆம்” என்று தேவன் சொல்லுவது நம்மை பிரியப்படுத்துவதற்காக அல்ல. அது மீட்பிற்க்காகவும், மறுரூபப்படுவதற்காகவும், அவருக்குள் மெய்யாக களிகூறுவதற்காகவும் உண்டானது.
எனவே, இன்றைக்கு, தேவனுடைய வாக்குத்தத்தங்களின் நிச்சயதத்தில் நாம் இளைப்பாறுவோமாக. நாம் அதின் முழு தாக்கத்தையும் பார்க்க முடியாவிட்டாலும் அவருடைய ஆம் என்பது பூரணமானது என்பதை நம்பி “ஆமேன்” என்று விசுவாசத்திலே சொல்லுவோமாக. மாம்சத்தின் அழிந்துபோகும் தற்காலிகமான திருப்தியிலிருந்து நம்முடைய சந்தோஷம் வராமல், எப்போதுமே உண்மையுள்ளவராகவும், நன்மையானவராகவும், தன்னுடைய வாக்குத்தத்தங்களில் தோல்வியற்றவராகவும் இருக்கும் தேவனோடு நம்முடைய ஆத்துமா ஒன்று பொருந்தி இருப்பதினால் மட்டுமே வருகிறது. தேவனுடைய ஆம் என்பது ஒரு அங்கீகாரம் அல்ல. அது ஒரு ஜீவன் கொடுக்கும் ஆத்துமாவின் ஆழத்தில் நடைபெறும் மறுரூபம் ஆகும். ஆமேன்.
இன்றைய சிந்தனைக்கு
தேவனுடைய வாக்குத்தத்தங்கள் என்றுமே நிச்சயமானவை. கிறிஸ்துவுக்குள் அனைத்து வாக்குத்தத்தங்களும் உறுதியான ஆம் என்பதாகும். அதற்கு நாம், ஆமேன் என்று பதில் அளிக்கும் போது நாம் தேவனுடைய நம்பிக்கையான திட்டத்திற்கு ஒப்புக்கொள்கிறோம். அவருடைய ஆம் என்பது நம்முடைய வாஞ்சைகளுக்கு ஒரு ஒப்புதலாக மட்டுமல்லாமல், அது நம்முடைய இருதயங்களை வனையக்கூடிய, நம்முடைய ஏக்கங்களை திசை திருப்பக்கூடிய, மற்றும் நம்மை நித்திய சந்தோஷத்திற்குள் நடத்தக்கூடிய ஒரு மறுரூபமாகும் கிரியையாகும். அது ஒரு சிட்சையாகவோ அல்லது சீர்திருத்ததலாகவோ தோன்றினாலும், தேவனுடைய ஆமேன் என்பது கிறிஸ்துவின் நிமித்தமாக நம்முடைய நன்மைக்காக அவருடைய மகிமைக்காக கிரியை செய்கிறது. இன்று நாம் அவருடைய பூரணமான ஆம் என்பதை நம்பி அதற்கு ஆமேன் என்று விசுவாசத்திலே சொல்லி அவருடைய மாறாத வாக்குத்தத்தங்களின் நிச்சயத்தில் இளைப்பாறுவோமாக.
ஜெபம்
பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உமக்கு முன்பாக நாங்கள் வருகிறோம். நீர் எங்களை மிக ஆழமாக அன்பு கூர்ந்ததினால் உம்முடைய ஒரே பெயரான குமாரனை எங்களுடைய இரட்சிப்பிற்காக நீர் கொடுத்தீர். நீர் எத்தகையான விலையேறப்பெற்ற மதிப்பை எங்கள் மேல் வைத்திருக்கிறதை அது காட்டுகிறது. ஆனாலும் அந்த மதிப்பை நாங்கள் அநேக நேரம் புரிந்து கொள்ளாமல் நீர் எங்களுக்காக வைத்திருக்கும் தரத்திலிருந்து நாங்கள் எங்களை தாழ்த்துகிறோம். நாங்கள் பாவிகளாய் இருந்தாலும் நீர் எங்களை விலையேறப்பெற்றவர்கள் என்று அழைக்கிறீர். நாங்கள் தகுதியற்றவர்களாய் இருந்தாலும் எங்களை தேர்ந்தெடுத்தீர். உம்முடைய அனுகிரகத்தில் மெய்யாக களிகூறுவதற்காக இன்றைக்கு எங்களை உமக்கு முன்பாக தாழ்த்துகிறோம். நீரே அன்பு, சமாதானம், மற்றும் சந்தோஷத்தின் முழுமையாய் இருக்கிறீர். இந்த உலகத்தின் தற்காலிகமான இன்பங்கள் அல்லாமல் உம்முடைய இரட்சணியத்தின் சந்தோஷமே எங்களுடைய வாழ்க்கையில் தொடர்ந்து இருப்பதாக. எங்களை உயிர்ப்பியும் கர்த்தாவே. நீ நல்லவர் என்பதை ருசித்துப் பார்க்கும்படியாய் எங்களுக்கு உதவி செய்யும். எங்களுக்கு எதிராக எழும்பும் அனைத்து வஞ்சனைகளில் இருந்தும் குற்றஞ்சாட்டுகளில் இருந்தும் எங்களை விடுவியும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம், ஆமேன்.
இன்றைக்கு கற்றுக்கொள்ள வேண்டியது
கிறிஸ்துவுக்குள்ளான தேவனின் வாக்குத்தத்தங்கள் அனைத்தும் உறுதியான ஆம் என்பதாயும், நம்முடைய ஆமென் என்பது அவருடைய உண்மைத் தன்மையில் நாம் வைக்கும் விசுவாசமாகும். அவருடைய ஆம் என்பது நம்முடைய தற்காலிகமான வாஞ்சைகளை மட்டும் திருப்திபடுத்தாமல், அது நம்மை மறுரூபப்படுத்தி அவருடைய நித்திய சந்தோஷத்திற்குள் நடத்துகிறது. சீர்திருத்துதலாக தோன்றினாலும் தேவனுடைய ஆமேன் என்பது நம்முடைய நலனுக்காகவும் அவருடைய மகிமைக்காகவும் செயல்படுகிறது. எனவே, அவருடைய மாறாத வாக்குத்தத்தங்களில் இளைப்பாறும்படியாக நான் உங்களை இன்று அழைக்கிறேன்.
(2025 டிசம்பர் மாதம் 20 அன்று கேள் மத்தேயு 11:28 ஊழியங்கள் சார்பாக Rev. இம்மானுவேல் அருள் பால் அவர்கள் எழுதிய தினசரி வேத தியானத்தின் பிரதிபலிப்பு சகோதரி லல்லி மற்றும் ஜெசிந்த் ஏஞ்சலால் மொழிப்பெயர்க்ப்பட்டது).
அறிவிப்புகள்:
1.உங்களுடைய சீஷத்துவ பயணத்தில் நீங்கள் ஆதரவை தேடுகிறீர்கள் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி) நடைபெறும் எங்களுடைய வாராந்திர சீஷத்துவ கூடுகையில் சேர உங்களை நாங்கள் அன்புடன் அழைக்கிறோம்.
இணைப்பு: https://us06web.zoom.us/j/81144235750pwd=RG4veEdLQkJNS1NxYW1ZWmNnb3EvQT09 (சந்திப்பு ஐடி (Meeting ID) : 8114423 5750. கடவுச்சொல் (Password): 12345).
2. தனிப்பட்ட ஆலோசனை பெற்றுக் கொள்ள நீங்கள் விரும்பினால் இந்த இணைப்பை உபயோகித்த தயவாக ஏற்பாடு செய்யுங்கள். https://scheduler.zoom.us/rev-immanuel-paul/appointment
3. எங்களுடைய ஊழியங்கள் மற்றும் கூடுகைகளை குறித்த அறிவிப்புகள் மற்றும் தகவல் தொடர்புகளை பெற்றுக் கொள்ள எங்களுடைய வாட்ஸ்அப் (WhatsApp) குழுவில் சேர உங்களை அழைக்கிறோம் https://chat.whatsapp.com/EokMFGuZdgb23Sg8BsHzas
உங்களுடன் விசுவாசத்திலும் ஐக்கியத்திலும் நடக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்.
பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் -> Tamil