இது கிறிஸ்துமஸ்

Posted on December 27, 2025

Home Publications Posts இது கிறிஸ்துமஸ்

இது கிறிஸ்துமஸ்

வாராந்திர வேத தியானம்: இது கிறிஸ்துமஸ்

வேத தியானக் குறிப்பு : ஏசாயா 9:2 “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.( ஏசாயா 9 : 2 )

நம் தேவனாகிய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பேற்ற நாமத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்தச் செய்தி கிறிஸ்துமஸுக்குப் பிறகு உங்களைச் சென்றடையலாம், ஆனால் நாம் கிறிஸ்துமஸ் ஏன்  கொண்டாடுகிறோம் என்பதைப் பற்றி சிந்திப்பதற்க்கு இது ஒருபோதும் தாமதமான ஒன்று அல்ல. நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து பிறந்திருக்கிறார் என்ற நற்செய்தியை நாம் அடிக்கடி சொல்லுகிறோம். அது உண்மையிலேயே அற்புதமான நற்செய்தி தான்! ஆனால், சில நேரங்களில் கிறிஸ்துமஸுக்குப் பின்னால் உள்ள ஒரு முக்கியமான கேள்வியை நாம் தவறவிடுகிறோம்.

இயேசு கிறிஸ்து ஏன் வந்தார்?

வேதாகமம் முழுவதும், கர்த்தராகிய தேவன் தனிநபர்களையும், கோத்திரங்களையும், ஜனங்களையும் தங்களை தாங்களே உயர்த்திக் கொள்வதற்காக அல்லாமல் உலகத்திற்கு ஆசிர்வாதமாக இருப்பதற்கே தெரிந்துகொண்டார். இந்த அழைப்பு சுயநலமாக மாற்றப்பட்ட போதெல்லாம், அழிவு தொடர்ந்தது.

நம்மை நம்முடைய பாவத்திலிருந்தும் அதன் விளைவுகளிலிருந்தும் விடுவிக்க இயேசு கிறிஸ்து வந்ததால் அவருடைய பிறப்பு நற்செய்தியே. ஆனால், நாம் இதன் நோக்கத்தை மறந்துவிட்டால், நாம் உண்மையில் எதைக் கொண்டாடுகிறோம்? தேவன், ஆதாமையும் ஏவாளையும் ஆசீர்வாதமாக இருப்பதற்கே உருவாக்கினார். அவர் ஆபிரகாமைத் தெரிந்துகொண்டது, அவரின் மூலம் எல்லா ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதற்காகவே. இயேசு கிறிஸ்து அவருடைய சீஷர்களை உலகிற்கு அவருடைய ஒளியை எடுத்துச் செல்லவே அழைத்தார். சகேயு கூட இயேசு கிறிஸ்துவை சந்தித்தபின், தன்னுடைய வளங்களை எல்லாம் தேவையுள்ளவராகிய ஏழைகளை உயர்த்தும்படி பயன்படுத்தினான்; அவனுடைய வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது.

சாலொமோனைப் பற்றியும் சிந்தித்துப் பாருங்கள். அவர் கட்டிய ஆலயம் இஸ்ரவேலுக்கான ஒரு பரிசுத்த இடமாக மட்டும் இல்லாமல், ஜாதிகள் அனைத்துக்கும் ஆசீர்வாதமாக இருக்குமாறு வடிவமைக்கப்பட்டது. எல்லா மக்களும் தேவனுடைய நாமத்தை அறிந்து அவருக்கு பயப்படும்படியாக, சாலமோன் தன்னுடைய ஜெபத்தில், ஆலயத்தை நோக்கி திரும்பி வருகிற புறஜாதியார்களின் அழுகுரல்களையும் கர்த்தராகிய தேவன் கேட்க வேண்டும் என்று வேண்டுகிறார். தேவன் தமது ஜனங்களின் மூலம் உலகத்தை ஆசீர்வதிக்க விரும்புகிறார் என்பதை தேவாலயத்தின் கட்டிட  அமைப்பும் அதன் நோக்கமும் சுட்டிக்காட்டின. எனவே, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் நடுவில், நான் உங்களிடம் இந்தக் கேள்வியை கேட்க என்னை தயவாக அனுமதியுங்கள்:

நீங்கள் ஒரு ஆசீர்வாதமாக இருக்க தேர்ந்தெடுப்பீர்களா?

வெறும், “நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்” என்று மட்டும் சொல்லாமல் இயேசு கிறிஸ்துவின் அன்பை உங்கள் குடும்பத்திற்கும், பிறரிடத்திலும், மற்றும் தேசத்தின் மேலும் அன்பு காட்ட தேர்வு செய்ய உங்களால் முடியுமா? உங்களை சுற்றி இருக்கும் மக்கள் உங்களுடைய கனிவான, மனமார்ந்த, மற்றும் இறக்கமான செயல்களின் மூலமாக மீட்பரின் பிறப்பின் பிரகாசத்தை காணட்டும். தாவீது தன்னுடைய அந்தஸ்தை தவறாய் பயன்படுத்தி பாவம் செய்தபோது அவன் வெளிச்சத்திற்கு ஒரு தடங்கலாய் மாறினதினால் தேவனாகிய கர்த்தர் அவனை நியாயம் தீர்த்தார். ஆனால் இயேசு கிறிஸ்து இருளும் மரணமும் நிறைந்திருந்த இந்த உலகத்திற்கு ஒரு மகத்தான மறுரூபப்படுத்தக் கூடிய ஒளியாக வந்தார்.

இந்தக் காலத்திலும் மற்றும் எப்போதும் இந்த ஒளியை நாம் பிரகாசிப்போமாக. மற்றவர்களை நாம் ஆசீர்வதிப்பதின் மூலமாக இயேசு கிறிஸ்துவின் மூலம் நாம் பெற்றிருக்கும் நித்திய ஜீவனை நாம் வெளி காட்டுவோமாக. நம்முடைய கொண்டாட்டங்கள் பாடல்களுடனும் அலங்காரங்களுடனும் முடிவடையாமல் கிரியையிலும் அன்பிலும் சேவையிலும் நிரம்பி வழிவதாக.

இயேசு கிறிஸ்துவின் ஒளியானது இன்று உங்கள் மூலமாக பிரகாசிக்கக்கடவதாக.

 

இன்றைய சிந்தனைக்கு

இன்று, நாம், இயேசு கிறிஸ்து நம்மை இரட்சிப்பதற்காக மட்டுமல்லாமல்  மற்றவர்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக வைக்கவும் வந்தார் என்பதை நினைவு கூறுகிறோம். வேதாகமத்தின் முழுவதிலும், தேவன், ஆதாம் ஏவாளிலிருந்து ஆபிரகாம், சாலமோனின் தேவாலயம், மற்றும் தன்னுடைய சீஷர்களுக்கும் வைத்திருந்த அழைப்பு எப்போதுமே அவருடைய ஒளியை உலகத்திற்கு பிரகாசிக்க கூடிய வெளிப்புற நோக்கத்துடன் இருந்தது. சகேயுவைப் போல மெய்யான மறுரூபமாக்கப்படுதல் தானாகவே இரக்கத்தின் மூலமாகவும் தாராள மனத்தன்மையின் மூலமாகவும் தன்னை வெளிப்படுத்தும். இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் நம்முடைய விசுவாசமானது வார்த்தைகளை தாண்டி இயேசு கிறிஸ்துவின் இருதயத்தை வெளிக்காட்டும் செய்கையாக கடந்து செல்வதாக. இன்று உங்களின் மூலமாக ஏதாவது ஒருவர் தேவனின் அன்பை அனுபவிக்கட்டும்.

ஜெபம்

பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உமக்கு முன்பாக வருகிறோம். தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்களுக்காக வழங்கிய அனைத்து காரியங்களுக்காகவும் உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்காகவும் அவருடைய வார்த்தைக்காகவும் பரிசுத்த ஆவியானவர்க்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இன்று, கிறிஸ்துமஸ் என்ற ஈவுக்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அது நாட்காட்டியில் ஒருநாளாய் இருந்தாலும் அது மெய்யாகவே தினமும் நினைவு கூறப்பட வேண்டும் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். நாங்கள் சில நேரங்களில் இந்த உலகத்தின் கவலைகளிலும் நுகத்திலும் சிக்கிக் கொண்டு நீர் வாஞ்சிக்கிற விதத்தில் கொண்டாட மறந்துவிடுகிறோம் என்பதை நாங்கள் அறிக்கை செய்கிறோம். கிறிஸ்துமஸ் ஏன் (நோக்கம் என்ன) என்பதை நாங்கள் சற்று நிதானித்து தியானம் செய்ய நீர் கொடுத்த இந்த நேரத்திற்காக உமக்கு நன்றி. எங்களுடைய துன்மார்க்கத்திலிருந்து எங்களை விடுவித்து உம்முடைய இராஜ்யத்திற்கு கனி கொடுக்கிறவர்களாக எங்களை மாற்றி  ஆசிர்வாதமாக இருக்க எங்களுக்கு உதவி செய்யும். உம்முடைய ஒளி எப்போதும் எங்கள் மூலமாக பிரகாசிக்கட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம், ஆமேன்.

இன்றைக்கு கற்றுக்கொள்ள வேண்டியது

இயேசு கிறிஸ்து ஒரு நோக்கத்துடன் வந்தார்: அதாவது, இந்த உலகத்திற்கு இரட்சிப்பையும் ஒளியையும் கொண்டு வந்தார். தேவன், எப்போதுமே தன்னுடைய பிள்ளைகள் வெறும் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளுகிறவர்களாய் மட்டும் அல்லாமல் ஒரு ஆசீர்வாதமாகவும் இருக்க தெரிந்து கொண்டார். சாலமோனின் தேவாலயத்தை போல நம்முடைய வாழ்க்கை மற்றவர்களை தேவனுக்கு நேராக இழுக்க கூடியதாக இருக்க வேண்டும். மெய்யான கொண்டாட்டம் சடங்காச்சாரங்களை தாண்டி கிரியையாக மாற வேண்டும். நம்முடைய கனிவு, இரக்கம், மற்றும் அன்பின் நிமித்தமாக இயேசு கிறிஸ்துவை ஒவ்வொரு நாளும் வெளிகாட்டுவோமாக.

(2025 டிசம்பர் மாதம் 27 அன்று கேள் மத்தேயு 11:28 ஊழியங்கள் சார்பாக Rev. இம்மானுவேல் அருள் பால் அவர்கள் எழுதிய தினசரி வேத தியானத்தின் பிரதிபலிப்பு சகோதரி லல்லி மற்றும் ஜெசிந்த் ஏஞ்சலால் மொழிப்பெயர்க்ப்பட்டது).

 அறிவிப்புகள்:

1.உங்களுடைய சீஷத்துவ   பயணத்தில்   நீங்கள்  ஆதரவை தேடுகிறீர்கள் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமையும்  காலை 6   மணிக்கு  (இந்திய நேரப்படி) நடைபெறும் எங்களுடைய வாராந்திர சீஷத்துவ         கூடுகையில்          சேர         உங்களை          நாங்கள்    அன்புடன் அழைக்கிறோம்.

இணைப்பு: https://us06web.zoom.us/j/81144235750pwd=RG4veEdLQkJNS1NxYW1ZWmNnb3EvQT09 (சந்திப்பு ஐடி (Meeting ID) : 8114423 5750.    கடவுச்சொல் (Password): 12345).

2. தனிப்பட்ட ஆலோசனை பெற்றுக் கொள்ள நீங்கள் விரும்பினால் இந்த இணைப்பை உபயோகித்த தயவாக ஏற்பாடு செய்யுங்கள். https://scheduler.zoom.us/rev-immanuel-paul/appointment 

3. எங்களுடைய ஊழியங்கள் மற்றும் கூடுகைகளை குறித்த அறிவிப்புகள் மற்றும் தகவல் தொடர்புகளை பெற்றுக் கொள்ள எங்களுடைய வாட்ஸ்அப் (WhatsApp) குழுவில் சேர உங்களை அழைக்கிறோம் https://chat.whatsapp.com/EokMFGuZdgb23Sg8BsHzas

4. இனி வரும் எங்களுடைய தியானச் செய்திகளை நீங்கள் தொடர்ந்து பெற விரும்புவீர்கள் என்றால், உங்களுடைய பெயரையும் மின்னஞ்சல் ஐடி யையும் (email ID) எங்களுடைய தகவல் சேகரிக்கும் தரவுதளத்தில் புதுப்பித்து மேம்படுத்துவதற்காக உங்களுடைய உதவியை நாங்கள் தயவாக கேட்டுக் கொள்கிறோம்.

இதற்காக, நீங்கள் நிரப்பும் படியாக ஒரு சிறிய கேள்வித்தாளை நாங்கள் தயார் செய்து இருக்கிறோம். இதை நீங்கள் நிரப்பி அனுப்பியவுடன் ஒரு ஆறு மாத பதிவு திட்டத்தில் நீங்கள் சேர்க்கப்படுவீர்கள். தமிழ், ஆங்கிலம், மற்றும்/ அல்லது தெலுங்கு மொழிகளில் நீங்கள் எந்த மொழியில் இந்த வெளியீடுகளை பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்யலாம். நீங்கள் ஒன்று அல்லது பல மொழிகளையும் தேர்ந்தெடுக்கலாம்.

இந்த செயல்முறையை நாங்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை மறுபடியும் புதுப்பிப்போம். இந்த கேள்வித்தாளிற்கான இணைப்பை உங்களுடன் மின்னஞ்சல் மூலமாக வரும் சில நாட்களில் பகிர்ந்து கொள்ளுவோம். இதை எங்களுடைய இணையதளத்திலும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த செயல்முறை மூலமாக கேள்வித்தாளை முடிப்பவர்களுக்கு மட்டுமே இனி வரும் தியான செய்திகள் அனுப்பப்படும் என்பதை தயவாக குறித்துக் கொள்ளுங்கள்.

உங்களுடன்  விசுவாசத்திலும்   ஐக்கியத்திலும்  நடக்க  நாங்கள் எதிர்நோக்குகிறோம்.