செய்திமடல், டிசம்பர் 2021

Posted on January 12, 2022

Home Publications Posts செய்திமடல், டிசம்பர் 2021

செய்திமடல், டிசம்பர் 2021

அன்புள்ள திருச்சபையோரே,

இயேசு கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவரையும் வாழ்த்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

கர்த்தருடைய கிருபையால் இந்த வருடத்தின் கடைசி மாதத்தைக் காண அவருடைய இரக்கம் நமக்கு கிடைத்தது. இந்த வருடம், நாம் பல தேவனுடைய ஊழியர்களை இழந்திருந்தாலும், மற்றும் சபைகள் அவருடைய பரிசுத்த ஸ்தலத்திலிருந்து அவரை ஆராதிக்க பல இடையூறுகளை எதிர்கொண்ட போதிலும், தேவனின் கரம் அவரை மகிமைப்படுத்த நமக்கு உதவுவதை நாம் இன்னும் பார்க்க முடிகிறது. இத்தனை இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், நம்முடைய கர்த்தராகிய தேவன் நம்மை அழிந்துபோக ஒருபோதும் அனுமதிக்கவில்லை. எனவே, நம்முடைய ஒவ்வொரு ஆராதனையும் அர்த்தமுள்ளதாக இருக்கட்டும். மற்றவர்களின் வாழ்க்கையை வலுவாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றுவதன் மூலம் உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கட்டும். ஒவ்வொரு உரையாடலும், ஐக்கியமும் அன்பின் கனிகளால் நிரப்பபட்டிருப்பதாக. உங்கள் அன்பை வெளிப்படுத்த உங்களுக்கு எந்த வாய்ப்பு கிடைத்தாலும், அதை இன்றே செய்யுங்கள், நாளைக்காக காத்திருக்காதீர்கள், ஏனென்றால் நாளை நமக்கானது அல்ல. முந்தைய செய்திமடல்களில், உறவுகளில் நீங்கள் காணும் சகித்துக்கொள்ளக் கூடாத பல அறிகுறிகளைப் பற்றி நான் நிறைய விவாதித்திருந்தேன். பலர் என்னை ஊக்குவித்து, தங்களுடைய வாழ்வில் அது ஆசீர்வாதமாக இருந்தது என்று வெளிப்படுத்தினர். இந்த ஊக்கங்களால் நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டேன். இருப்பினும், இந்தப் துதி அனைத்தும் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவுக்கே உரியது. இந்த வெளிப்பாடுகள் என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான பங்கைக் கொண்டிருந்தன, அதனால்தான் இந்த விலைமதிப்பற்ற ஆசீர்வாதங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தேன். செய்திமடலை நீங்கள் பெலத்தின் ஆதாரமாக பார்க்கும் போதெல்லாம், இதற்குப் பின்னால் இருக்கும் குழுவுக்காக தயவுசெய்து ஜெபித்து கொள்ளுங்கள். பொதுவாக, தாமதத்திற்கு நான் தான் காரணம், தயவுசெய்து என்னை பொறுத்துக்கொள்ளுங்கள்.

இந்த பகுதியில், நம் வாழ்வில் நாம் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றான, துஷ்பிரயோகம் செய்யப்படுவதை குறித்து பார்க்கப் போகிறோம்.

துஷ்ப்ரயோகம் என்று நான் கூறும் போது நான் சொல்லுவது என்னவென்றால், ஒரு உறவில் நாம் ஒருவரால் சொற்களால் மற்றும் செயல்களால் தவறாக உபயோகிக்க படுவது மற்றும் நடத்தப்படுவது ஆகும். இது மற்றவர் அவருடைய நலனுக்காக மற்றும் லாபத்திற்காக நம்மை ஒடுக்கி இழக்க செய்து அழிப்பதாகும். மேலும் நம்மை தொடர்ந்து குறை சொல்லி, மட்டம் தட்டி, அவமதித்து நம்மை காயப்படுத்தி மனஉளைச்சலுக்குள்ளாக்குவதாகும்.

பல சமயங்களில், துஷ்பிரயோகம் என்பது மற்றவர்கள் நமக்கு செய்யும் அநீதி என்று உணர்கிறோம். அன்பான சகோதர சகோதரிகளே, நம்முடைய தவறுகளும் அறியாமையும் தான் நம் மகிழ்ச்சியை அழிக்கும் துஷ்ப்ரயோகருக்கு பலம் தருகிறது. துஷ்பிரயோகம் செய்பவரால் நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள் என்பதை நீங்கள் உணரும்போதெல்லாம், அது அந்த உறவைப் பற்றி எச்சரிக்கும் சிவப்புக் கொடியாகும். இது, நீங்களே நியாயத்தீர்ப்பு செய்து, துஷ்பிரயோகம் செய்பவரைக் குற்றம் சாட்டவோ அல்லது உறவை முறித்துக் கொள்ளவோ உங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது என்று அர்த்தமல்ல. மாறாக, அதை நீங்கள் பொறுத்துக்கொள்ளப்படக்கூடாது என்றும் மற்றும் சிக்கலை சரிசெய்ய மருத்துவரின் கவனிப்பு தேவை என்றும் அர்த்தம். ஒரே ஒரு மருத்துவராகிய, இயேசு கிறிஸ்து, சிகிச்சையின் போக்கை தீர்மானிப்பார். சில சமயங்களில், சில சிறிய திருத்தங்கள் மூலம் அது குணமாகலாம் அல்லது சில நேரங்களில் மருத்துவமனையில் சிறப்பு கவனம் தேவைப்படும் சிகிச்சை தேவைப்படலாம். சில அரிதான சந்தர்ப்பங்களில், அவர் பாதிக்கப்பட்ட உடலை அகற்றிவிடுவார். இதனால், உடலின் மற்ற பகுதிகள் அவரில் பெலனடைந்து தேவனின் அன்பை வெளிப்படுத்தவும் அவருடைய மகிமையான நாமத்திற்கு சாட்சியம் அளிக்கவும் முடியும். பிரசங்கி 12:14. ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார். எனவே, சூழ்நிலையை குறித்தும் துஷ்பிரயோகம் செய்பவரின் தந்திரம் குறித்தும் கவலைப்பட வேண்டாம்; அதை நீதிக்கு கொண்டு வருவது இயேசு கிறிஸ்துவின் பொறுப்பாகும், மேலும் அவர் அதற்கான உரிய பரிமாணத்தை அளிப்பார். எரேமியா 23:5 & 6 இல் 5. இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார். 6. அவர் நாட்களில் யூதா இரட்சிக்கப்படும், இஸ்ரவேல் சுகமாய் வாசம்பண்ணும்; அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதே. உங்களை அழிக்கும் அநீதி மற்றும் அனைத்து துஷ்பிரயோகங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம், அவற்றை இயேசு கிறிஸ்துவிடம் மட்டும் கொண்டு செல்லுங்கள். உங்கள் நீதிக்கான பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார் என்று வேதாகமம் சொல்கிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் நமது ராஜாவும் இரட்சகருமானவரிடத்தில் மன்றாடுவது மட்டும்தான்.

துஷ்பிரயோகம் செய்பவர் யார்?

அன்புள்ள சகோதர சகோதரிகளே, நாம் கேட்க வேண்டிய முதல் கேள்வி, “துஷ்பிரயோகம் செய்பவர் யார்?” பிசாசுதான் துஷ்பிரயோகம் செய்பவன் என்பது நமக்கு தெளிவாகிறது, ஏனென்றால் அவனே நம் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் அழிக்கிறான். சில நேரங்களில், நல்ல சீர்திருத்தம் கூட, நம் மகிழ்ச்சியை அழித்துவிடும், ஏனென்றால், இயல்பிலேயே நாம் உண்மையை வெறுக்கிறோம். எனவே, அழிவிற்கும் சீர்திருத்தத்திற்கும் உள்ள வேறுபாட்டை நாம் அறிந்து கொள்ள வேண்டும். பிசாசு, பயனற்ற தற்காலிக இன்பங்களைக் கொடுப்பதன் மூலம் நித்திய வாழ்க்கையை அழிக்கிறான். இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாகிய நாம் அவதூறு கூறுவது மற்றும் சீர்திருத்தம் ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை அறிந்து கொள்ள வேண்டும். இதை எளிதாக கண்டுகொள்ளக்கூடிய வழி, குற்றம் சாட்டுதல் மற்றும் உணர்வடையவைத்தல் ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை அறிந்துகொள்வதாகும். பிசாசு, நம்முடைய தவறுகளையோ அல்லது மற்றவர்களின் தவறுகளையோ பார்க்க வைத்து நம்மைக் குற்றம் சாட்டுவான். நியாயப்பிரமாணம், எது சரி எது தவறு என்பதை நமக்குச் சொல்லி, இவ்வாறு அதை விதியாக்கும்; ஆனால் கிருபை அதை உணர நம்மை வழிநடத்தும், அதனால் அது நம் இதயத்தில் எழுதப்படும். “செய்யவேண்டியவை” அல்லது “செய்யக்கூடாதவை” என்று கட்டளையிடுவதை விட, பாவம் செய்வதற்கான காரணத்தையும் அதற்கான தீர்வையும் பரிசுத்த ஆவியின் செயல் நமக்கு உணர்த்தும். எனவே, இயேசு கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் கற்றுக் கொள்ளும் சீர்திருத்தமே உணர்வடைதல். இதை சகரியா 12:10,11ல் பார்க்கலாம், 10. நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். 11. அந்நாளிலே மெகிதோன் பட்டணத்துப் பள்ளத்தாக்கின் ஊராகிய ஆதாத்ரிம்மோனின் புலம்பலைப்போல எருசலேமின் புலம்பல் பெரிதாயிருக்கும். பரிசுத்த ஆவியானவர் ஒருவரைக் கண்டிக்கும் போது, அந்த நபர் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக துரோகம் செய்ததற்காக புலம்புவார். மறுபுறம், பிசாசு, நம் இதயங்களை உடைத்து, நம்மை குற்றவாளியாக உணரவும், தவறுகளுக்காக வருந்தவும், விளைவுகளைப் பற்றி கவலைப்படவும் செய்து இரட்சிப்பு மற்றும் மனந்திரும்புதலின் மீது ஒருபோதும் கவனம் செலுத்த விடமாட்டான். அவன் ஒருபோதும் தேவனுடனான நமது சீர்குலைந்த உறவில் கவனம் செலுத்த விடமாட்டான், மாறாக, அவன் நம் தோல்வியின் மீது கவனம் செலுத்த செய்வான். நமது தேவன் இரண்டாம் முறையும் வாய்ப்பளிக்கும் தேவன். நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக விளைக்கிரையம் கொடுத்தார் என்பதை நினைவில் கொள்ள பிசாசு அனுமதிக்க மாட்டான். இவ்வாறு, உங்கள் கடந்த காலத்தைப் பற்றி உங்களுக்கு மனத்தளர்வை உண்டாகி உங்கள் இதயத்தை உடைக்கும் அனைத்தும் பாம்பின் சத்தம். ரோமர் 7:24, 25-லிருந்து பவுலின் சாட்சியைக் காண்க 24. நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? 25. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன். இந்தப் பகுதியில் ஒரு பாவியின் நம்பிக்கையைக் காண்கிறோம். இது பரிசுத்த ஆவியின் செயல்.

பல சமயங்களில், சீர்திருத்தங்களைத் தீர்ப்பு என்று தவறாக எண்ணி நம்மை நாமே குற்றம் சாட்டுகிறோம். நீங்கள் பரிசுத்த ஆவியானவரால் கண்டிக்கப்படும்போது, ​​அது ஒரு ஆசீர்வாதம். பரிசுத்த ஆவியானவர் கிருபையின் சிங்காசனத்திற்குச் செல்வதற்கான தைரியத்தையும் அணுகலையும் நமக்கு தருகிறார். எபிரேயர் 4:16 இல் 16. ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். ஒரு நபரின் வாழ்க்கையில், சீர்திருத்தம் எப்போதும் அவரின் தவறுகளை அன்பின் வெளிச்சத்தில் உணர வழிவகுக்கும். ஒருவரைத் திருத்துபவர், ஒருவரை ஒருபோதும் நியாயந்தீர்க்க மாட்டார், மாறாக, அவர் நம் தவறுகளில் நம்முடன் நின்று நம் வலியைப் பகிர்ந்துகொள்வார். குடும்ப வாழ்க்கையில், பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் திருத்துவதற்குப் பதிலாக துஷ்ப்ரயோகம் செய்கிறார்கள். ஒருவரிடம் வளங்களும் வலிமையும் இருப்பதை சாதகமாக்கி, சிறு குழந்தைகளை திட்டுவதும்  அல்லது சபிப்பதுமாக இருந்தால், அது துஷ்பிரயோகமாகும். துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர் என்று வரும்போது, ​​ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்: துஷ்பிரயோகம் செய்பவருக்கு நீங்கள் அணுகலை வழங்காத வரை, அவர்களால் உங்களுக்கு தீங்கு செய்ய முடியாது. அதனால்தான் பிசாசை எதிர்க்கும்படி வேதம் நமக்கு கட்டளையிடுகிறது. யாக்கோபு 4:7ல் 7. ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். நீங்கள் இயேசு கிறிஸ்துவின் கட்டளைக்கு கீழ்ப்படியாமல், துஷ்பிரயோகம் செய்பவர் உங்கள் வாழ்க்கையில் இருக்க அனுமதித்தால், வலி, துன்பம், பாரம் போன்றவை உங்களை அழிக்க உங்கள் வாழ்க்கையில் நுழையும். மத்தேயு 5: 38 – 42 இல் இயேசு கிறிஸ்து கொடுத்த கட்டளையைப் பற்றி நீங்கள் கேட்கலாம் 38. கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல் என்று உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 39. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு. 40. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. 41. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ. 42. உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே. முந்தைய யாக்கோபு பகுதியில், ‘எதிர்த்து நில்லுங்கள்’ என்ற வார்த்தைக்கு வேறு அர்த்தம் உள்ளது. துஷ்பிரயோகம் செய்பவருக்கு பதிலுக்கு நாமும் தவறான துஷ்ப்ரயோக தன்மையைக் காட்ட முடியாது. அதே சமயம், துஷ்பிரயோகம் செய்பவர் நம் வாழ்க்கையை அழிக்கவும் அனுமதிக்க முடியாது. எபேசியருக்கு பவுல் எழுதிய நிருபத்தில், அதிகாரம் 5:11 இவ்வாறு கூறுகிறது: 11. கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள். இங்கே, பவுல் ‘உடன்படாமல்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். ஏசாயா 63:10 இல் 10. அவர்களோ கலகம்பண்ணி, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்குச் சத்துருவாய் மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினார். இங்கே, அவர்கள் பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தியபோது, ​​அவர் அவர்களுடனான உறவை முறித்துக் கொண்டார். தொடர்ந்து அவரை துக்கப்படுத்த அவர்களை தேவன் அனுமதிக்கவில்லை. எனவே, மத்தேயுவின் வசனத்தின்படி, ‘மறு கன்னத்தைக் காட்டுவது’ என்பது அவதூறு செய்பவர் உங்களைத் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. அது, ஒரு துஷ்பிரயோகத்தை தெய்வீக முறையில் கையாளும் விதத்தை தெரிவிக்கிறது. எனவே, துஷ்பிரயோகம் செய்பவரை நாம் எதிர்க்க வேண்டும். நாம் அதைச் செய்யும்போது, ​​ தேவன் நமக்காக யுத்தங்களை செய்வார்.

கிறிஸ்துவில் அன்பான சகோதர சகோதரிகளே, இதுவரை துஷ்பிரயோகம் மற்றும் துஷ்பிரயோகம் செய்பவரை எதிர்ப்பது பற்றி பார்த்தோம். பல சமயங்களில், ஆதரவற்ற நிலையில் வாழும் வயதான பெற்றோர்களைப் பார்த்திருப்போம். பல சூழ்நிலைகளில், அவர்கள் கடந்து செல்லும் காரியங்கள் உண்மையில் என் இதயத்தை உடைக்கிறது. இது தொடர்பாக, எனது கருத்தை தெரிவிக்க விரும்புகிறேன். மத்தேயு 7:2ல் 2. ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். இங்கே ஒரு அமைப்பு எவ்வாறு இந்த உலகில் இயங்குகிறது என்பதை பார்க்கலாம். உணர்ந்து மனம் வருந்தாத வரையில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதை நிச்சயம் அறுவடை செய்வீர்கள். நீங்கள் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்போது, சீர்​​திருத்தம் என்ற பெயரில், உங்கள் பெற்றோர்கள், குழந்தைகள் மற்றும் சக சகோதர சகோதரிகளை துஷ்பிரயோகம் செய்தால், அதே கொடுமை உங்களைத் தேடி வரும். யாக்கோபு 2:13-ல் உள்ளதைப் போல நீங்கள் இரக்கம் காட்டினால், பின்னர் அதுவே உங்களிடம் திரும்பும். 13. ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும். இங்கு பிறருக்கு இரக்கம் காட்டியவர்களின் வாழ்வில் மட்டுமே தேவனின் இரக்கம் வெளிப்படும் என்பதை காண்கிறோம். மத்தேயு 18:6-ல் எழுதப்பட்டுள்ள இயேசு கிறிஸ்துவின் எச்சரிக்கையை நினைவில் கொள்ளுங்கள் 6. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும். எனவே, உங்களுக்குக் கீழ் இருப்பவர்களைத் சீர்திருத்தும்போது, ​​அவர்களை புண்படுத்தாமல் இருக்க கவனமாக இருங்கள். சீர்திருத்தம் அவசியம், ஆம், இது பெரியவர்கள், தலைவர்கள் மற்றும் பெற்றோரின் பொறுப்பு, ஆனால் அது அவர்களுக்கு மற்றவரை புண்படுத்தவோ அல்லது அவர்களை துஷ்பிரயோகம் செய்யவோ அனுமதி வழங்காது. துஷ்பிரயோகம் செய்பவராக மாறாமல் இருக்க கவனமாக இருங்கள்.

துஷ்பிரயோகத்தை எதிர்ப்பது:

துஷ்பிரயோகத்தை எதிர்ப்பது ஒரு முக்கியமான விஷயம். ஒருவர் உங்களை துஷ்பிரயோகம் செய்வதால், அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்யவோ அல்லது அவர்களுக்கு எதிராக போராடவோ உங்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. இயேசு கிறிஸ்து அவர்களுக்கு எதிராகப் போரிட்டார், ஏனென்றால் அவர் ராஜா, யுத்தம் அவருடையது. யாத்திராகமம் 14:13,14 இல் 13. அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். 14. கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான். துஷ்பிரயோகம் செய்பவருக்கு எதிராக ஒரு போர் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதை இங்கே காண்கிறோம். யுத்தம் செய்வது நமது பொறுப்பு அல்ல, அது இயேசு கிறிஸ்துவினுடைய பொறுப்பு என்றால் அவர் நம்முடைய இரட்சகர். அப்படியானால், நம்மை துஷ்பிரயோகம் செய்பவருக்கு எதிரான போரில் நாம் என்ன செய்ய வேண்டும்? யாக்கோபு 4:7-10ல் 7. ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். 8. தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள். 9. நீங்கள் துயரப்பட்டுத் துக்கித்து அழுங்கள்; உங்கள் நகைப்பு துக்கிப்பாகவும், உங்கள் சந்தோஷம் சஞ்சலமாகவும் மாறக்கடவது. 10. கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார். இங்கே, வழிமுறை தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாவதாக இயேசு கிறிஸ்துவிடம் நாம் நெருங்கி வர வேண்டும். நாம் இயேசு கிறிஸ்துவுடன் ஐக்கியம் கொள்ளாத வரை, நாம் யுத்தங்களில் போராட முடியாது. இந்தப் யுத்தத்தில், மாம்சம் உங்களை பலவீனப்படுத்தும், ஆனால் ஆவியானவர் முன்னோக்கிச் செல்வதற்கான விருப்பத்தைத் தருவார். எந்த ஒரு யுத்தத்திலும் ஒன்றை நினைவில் வையுங்கள், உலகம் முழுவதும் உருவம் இல்லாமல், ஒழுங்கின்மையும் இருளும் நிறைந்திருந்தபோது, ​​ தேவனின் வாயிலிருந்து வார்த்தை உச்சரிக்கப்பட்டவுடன், முழு யுத்தமும் முடிந்துவிட்டது. எனவே, நாம் செய்ய வேண்டியது எல்லாம் தேவனால் சொல்லப்படும் வார்த்தைக்காக காத்திருக்க வேண்டும். இரண்டாவதாக, நாம் உலக அமைப்பிலிருந்து தூய்மைப்படுத்தப்பட வேண்டும். பிரச்சனைக்கான வேர் நம் வாழ்விலிருந்து அகற்றப்படாவிட்டால், தேவனின் இரட்சிப்பை நாம் எதிர்பார்க்க முடியாது. எனவே, நமது பழைய வாழ்க்கையை விட்டுக்கொடுப்பது நமது விடுதலையில் முக்கிய பங்கு வகிக்கிறது. முழு வேதாகமத்தின் பொருளே மனந்திரும்புதலைப் பற்றியது. எனவே, மனந்திரும்புதலின் செய்தி இல்லாமல், உங்கள் வாழ்க்கையில் எதுவும் மாறப்போவதில்லை என்பதை புரிந்துகொள்வது நல்லது. மூன்றாவதாக, தேவனுடைய இரக்கத்திற்காக மன்றாடுங்கள். தேவனுடைய இரக்கம் இல்லாமல் யாரும் இயேசு கிறிஸ்துவிடம் வர முடியாது. இறுதியாக உங்களைத் தாழ்த்திக் கொள்ளுங்கள். யுத்தத்திற்கு உங்கள் பலமும் திறமையும் போதாது என்பதை ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்ளுங்கள். துஷ்பிரயோகம் செய்பவரை எதிர்க்க இந்த நான்கு குறிப்புகளும் உங்களுக்கு உதவும்.

துஷ்பிரயோகம் செய்பவரின் உண்மையான இயல்பு:

என் வாழ்க்கையில், பல ஆண்டுகளாக, நான் எப்போதும் துஷ்ப்ரயோகம் செய்யும் தவறான நபர்களால் சூழப்பட்டிருந்தேன். இந்த துஷ்பிரயோகம் செய்பவர்களை என் வாழ்க்கையில் எப்படி, எங்கு அனுமதித்தேன் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது எனக்கு ஒரு வெளிப்பாடு வந்தது. அவர்களுடைய பாதுகாப்பற்ற மற்றும் நிலைவரமற்ற உணர்வின் காரணமாக என்னை அவர்கள் தவறாக நடத்தி துஷ்பிரயோகம் செய்தனர். நான் அனுபவிக்கும் வளர்ச்சியால் அவர்கள் அச்சுறுத்தப்பட்டதாக உணர்ந்தனர். வெளிப்படுத்துதல் 12:13 – 17 இல் 13. வலுசர்ப்பமானது தான் பூமியிலே தள்ளப்பட்டதை அறிந்து, அந்த ஆண்பிள்ளையைப்பெற்ற ஸ்திரீயைத் துன்பப்படுத்தினது. 14. ஸ்திரீயானவள் அந்தப் பாம்பின்முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாய் வனாந்தரத்திலுள்ள தன் இடத்திற்குப் பறந்துபோகும்படி பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது. 15. அப்பொழுது அந்த ஸ்திரீயை வெள்ளங்கொண்டுபோகும்படிக்குப் பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற வெள்ளத்தை அவளுக்குப் பின்னாக ஊற்றிவிட்டது. 16. பூமியானது ஸ்திரீக்கு உதவியாகத் தன் வாயைத் திறந்து, வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து ஊற்றின வெள்ளத்தை விழுங்கினது. 17. அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று. இந்த வசனம், இரவும் பகலும் தேவனுடைய பிள்ளைகளை குற்றம் சாட்டும் பழைய வலுசர்ப்பத்தை பற்றியது. இந்த வசனங்களிலிருந்து துஷ்பிரயோகம் செய்பவர்களின் சில முக்கியமான பண்புகளை நாம் கண்டுபிடிக்கலாம். முதலில், துஷ்பிரயோகம் செய்தவன் அவனது இடத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டான். துஷ்பிரயோகம் செய்பவரின் முக்கிய பிரச்சனை என்னவென்றால், அவர்கள் ஒரு நல்ல இடத்தில் இருக்க தகுதி மற்றும் பயிற்சி பெற்றிருந்தாலும், அவர்கள் தங்கள் பெருமையால் அழிக்கப்படுகிறார்கள். இந்த பகுதியில், சாத்தான், பூமியில் எறியப்படுவதற்காக உருவாக்கப்படவில்லை, மாறாக ஒரு தலைவனாக இருக்க வேண்டும்; ஆனால், அவனுடைய மனப்பான்மை அனைத்தையும் அழித்துவிட்டது. இரண்டாவதாக, தனது தோல்வியை மறைக்க அவன் எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. தேவனுக்கு எதிரான போரில் பிசாசால் வெற்றி பெற முடியவில்லை, அதனால் தனது தோல்வியை மறைக்க ஸ்திரீயுடன் தனது இரண்டாவது சண்டையை தொடங்கினான். இதன் போலவே துஷ்ப்ரயோகம் செய்பவர்கள் அவர்களுக்கு ஈடான நபர்களுடன் போரிட மாட்டார்கள். இதுவே நமது யுத்தங்களில் நாம் பலவீனமாக உள்ள பகுதிகளில் மட்டுமே தாக்கப்படுவதற்கு காரணம். ஆயினும்கூட, உங்கள் பலவீனத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம், ஏனென்றால் நாம் ஆராதிக்கும் கர்த்தராகிய ஆண்டவர், நம்முடைய பலவீனத்தில் நமக்கு பலமாக இருப்பார் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். உங்கள் இருதயங்களை அசைக்கவோ அல்லது திகைக்கவோ அனுமதிக்காதீர்கள். துஷ்பிரயோகம் செய்பவர்கள் துஷ்பிரயோகம் செய்வதற்கான மூன்றாவது காரணம், அவர்களின் இழிவான மனப்பான்மை. பிசாசு தனது தனிப்பட்ட வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தையை கடைபிடிக்க முடியவில்லை, எனவே தேவனுடைய வார்த்தையை தங்கள் வாழ்க்கையில் காத்துக்கொள்ள முயற்சிக்கும் அனைவருக்கும் அவன் எதிரானவன். துஷ்ப்ரயோகக்காரர்கள், காண விரும்புவது ஒன்றே: தாங்கள் அடைந்த தோல்வியை உங்கள் வாழ்க்கையிலும் பார்க்க விரும்புவார்கள். எனவே, அவர்கள் உங்களை துஷ்பிரயோகம் செய்ய முயற்சிக்கும்போது, ​​அவர்கள் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தவறாக உங்களை நடத்தும் உறவை எதிர்த்து நில்லுங்கள்,   விரைவில் அவர்களின் தோல்வி அவர்களை தின்றுவிடும். நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை.

முடிவுரை:

முடிவில், துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிரான யுத்தம் தொடர்பான எச்சரிக்கையைப் பற்றி நான் பேச விரும்புகிறேன். நிச்சயமாக, துஷ்பிரயோகம் செய்பவர்கள் விளைவை அறுவடை செய்வார்கள், ஆனால் நாம் எதிர்கொள்ளுவதற்கு கடினமான சில சூழ்ச்சிகளை அவர்கள் மிகவும் தந்திரமாக கையாளுவார்கள். அவர்கள் நமது அனுதாபத்தை தவறான வழியில் பயன்படுத்துவார்கள். துஷ்பிரயோகம் செய்பவர்கள் நமது நல்ல நோக்கங்களைக் தவறாக பயன்படுத்தி நம் வாழ்வில் தொடர்ந்து இருக்க முயற்சிப்பார்கள். பலவீனர்களிடம் இரக்கம் காட்டுவது தெய்வீக குணம். இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் நாம், ஏழைகளுக்கு உதவ நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். ஆனால், துஷ்பிரயோகம் செய்பவர்களின் விஷயத்தில், நாம் வெறுமனே நம் வழியில் இருந்து விலகி சென்று அவர்களுக்கு உதவ முடியாது. அவர்களின் தவறான துஷ்ப்ரயோக இயல்புக்காக அவர்கள் வருத்தப்பட்டு, நம்முடனான உறவை சரியாக அமைத்துக் கொள்ளாத வரை, நாம் அவர்களுக்கு உதவ முடியாது. 2 நாளாகமம் 19:1,2 இல் 1. யூதாவின் ராஜாவாகிய யோசபாத், எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பிவந்தான். 2. அப்பொழுது அனானியின் குமாரனாகிய யெகூ என்னும் ஞானதிருஷ்டிக்காரன் புறப்பட்டு, அவனைச் சந்தித்து, ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: துன்மார்க்கனுக்குத் துணைநின்று, கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீர் சிநேகிக்கலாமா? இதினிமித்தம் கர்த்தருடைய கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது. நாம் யாருக்கு உதவ முடியும் என்பதை அறிய இது ஒரு சிறந்த உதாரணம். துஷ்பிரயோகம் செய்பவருக்கு உதவுவது நல்ல யோசனையல்ல; அது நம்மை அழிக்க முடியும். தாவீது பாவம் செய்தபோது, ​​அவன் எச்சரிக்கப்பட்டு திருத்தப்பட்டான், வெறுமென உதவப்படவில்லை. எனவே, ஒரு துஷ்ப்ரயோகம் செய்யும் நபருக்கு, மனந்திரும்புதலின் செயல்பாட்டில் உதவுவதற்குப் பதிலாக கண்மூடித்தனமாக உதவுவது, அருவருப்பானது. அதனால்தான் நீங்கள் ஒருவருக்கு உதவி செய்யும்போது உங்கள் மாம்சத்தால் உந்தப்படக்கூடாது என்பது முக்கியம்.

பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலைப் புரிந்துகொள்ள கர்த்தராகிய ஆண்டவர் உதவுவராக.

இந்த கிறிஸ்துமஸ் காலம் இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பின் மூலம் வரும் மகிழ்ச்சியை உணர உங்களுக்கு உதவட்டும். அவரது பிறப்பு அவரது அன்புடனும் பரிசுத்தத்துடனும் கொண்டாடப்படட்டும். உங்கள் வாழ்க்கையில் முக்கியமானவற்றில் கவனம் செலுத்த உங்களுக்கு தேவையான பலத்திற்காக நான் இயேசு கிறிஸ்து மூலம் பரலோக பிதாவிடம் ஜெபிக்கிறேன்.

இயேசு கிறிஸ்துவின் அன்பும், இரக்கமும், கிருபையும் உங்களை வழிநடத்தி, ஆறுதல்படுத்தி, பாதுகாப்பதாக. கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.