அனுதின வேததியானம் :உங்கள் கொள்கைகளைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்
இன்றைய வேததியான குறிப்பு: பிலிப்பியர் 2-5.
“உண்மையாகவே, என் வாழ்க்கையை ஆளுகை செய்து வழிநடத்துவது எது? என் சிந்தனைகள், என்னுடைய உணர்ச்சியின் வெளிப்பாடுகள் மற்றும் முடிவுகளை ஒவ்வொரு நாளும் வடிவமைப்பது எது?” என்று உங்களை ளை நீங்களே கேட்டுக்கொண்டதுண்டா? நாம் நம்முடைய வெளிப்புற தோற்றத்தில் மட்டுமல்லாமல் நம்முடைய உள்ளான இயல்பிலும் தேவனுடைய சாயலில் உருவாக்கப்பட்டு இருக்கிறோம் என்று வேதாகமம் சொல்லுகிறது. அவருடைய இயல்பு, மகிமை, அன்பு. சத்தியம், மற்றும் நீதி ஆகியவை நம்மூலமாக பிரகாசிக்க வேண்டும் என அவரால் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த மனுகுலம் பாவம் செய்தபோது நாம் அந்த மகிமையை இழந்தோம். ஆனாலும், தேவன் நம்மை அப்படியே விட்டுவிடவில்லை. அவருடைய மகத்தான அன்பினால், இழந்ததை மீட்டெடுக்கவும், அவருடன் நம்மை மீண்டும் இணைக்கவும் அவர் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பினார். கிறிஸ்தவத்தின் உண்மையான நோக்கம். நாம் ஒழுக்க நெறிமுறைகளோடு வாழ்வதோ அல்லது தேவலாயத்திற்குச் சொல்வதோ மட்டுமல்ல அது, தேவனுடன் ஐக்கியமாக இருப்பதைப் பற்றியது. அதாவது, அவருடைய சுவாபமும் கொள்கைகளும் கோட்பாடுகளும் நமக்குள்ளாக நிலைத்து நிற்கும் வரை நாம் மறுரூபமாகப்படுவதையே குறிக்கிறது. இப்படி இருக்க, நாம் அவரோடு இணைய வேண்டும் என்று விரும்பும் தேவன் யார்? இதை வேதாகமம் தெளிவாகக் வரையிட்டு காட்டுகிறது: தேவன் அன்பாகவே இருக்கிறார். அவரே சத்தியம். அவர், சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம் இச்சையடக்கம் உள்ளவர். அவர், நியாயமாகவும் இரக்கமாகவும் இருக்கிறார். அவர் நீதி மற்றும் கொள்கைகளும் நெறிமுறைகளும் நிறைந்தவராய் இருக்கிறார். எனவே, அவர் தம்முடைய கொள்கைகளின்படி செயல்படுவதால், அவருடைய கொள்கைகள் நம்முடைய இருதயங்களில் எழுதப்படாவிட்டால் மெய்யாகவே நாம் அவருக்குச் சொந்தமானவர்கள் என்று சொல்ல முடியாது. இதனால் தான் பிலிப்பியர் 2:5 நம்மை இவ்வாறு வலியுறுத்திகிறது. “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது.” இதைப்பற்றி நன்றாக சிந்தித்து பாருங்கள். தேவன் நாம் சில விதிகளைப் பின்பற்றுவதை மட்டும் விரும்பவில்லை. நாம் கிறிஸ்துவைப் போல சிந்திக்கவும், உணரவும். செயல்படவும் அவர் விரும்புகிறார். அவருடைய கொள்கைகள் நம்முடைய இருதயங்களில் பதிந்து நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
“கொள்கைகள்” அல்லது “கோட்பாடுகள் என்று நாம் பேசும் போது உண்மையில் அதற்கான அர்த்தம் என்னவாக இருக்கும்? ஆக்ஸ்போர்டு அகராதி அதை. “நம்முடைய நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் வடிவமைத்து அவைகளின் தோற்றத்தின் அடிப்படையாக இருக்கும் உள்ளார்ந்த சத்தியம்” என்று வலியுறுத்துகிறது. அது, நீங்கள் ஒரு மனிதராய் யாராய் இருக்கிறீர்கள்? உங்களுடைய குணாதிசயத்தை எது ஆளுகை செய்கிறது? உங்களுடைய சிந்தனைகளை ஊக்குவிப்பது எது? உங்களுடைய நடவடிக்கைகளை உந்துகிறது எது? மற்றும், உங்களுடைய அடிப்படையான அமைப்பு என்னவாய் இருக்கிறது? என்பதே ஆகும். வேறு வார்த்தையில் சொல்வோமனால், உங்கள் ஆத்துமா எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது? உங்கள் அத்துமா கிறிஸ்துவுடனான கோட்பாடுகளால் நிரப்பப்பட்டுள்ளாதா அல்லது உலகக் கோட்பாடுகளால் நிரப்பப்பட்டுள்ளதா? நீதிமொழிகள் 4:23 “ எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவவூற்று புறப்படும்”. நாம் செய்கிற அனைத்தும் நம் இருத்தயத்தின் நிலையிலிருந்து அதன் விளைவாக வருகிறது. நாம் ஒரு நிமிடம் சற்று சிந்தித்துப் பார்ப்போம். கிறிஸ்தவர்களாகிய நாம் நம் இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறோமா? நாம் யார் என்றும் தேவனுக்கு விரோதமான எந்த கொள்கைகளை நாம் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் உண்மையாகவே பகுத்தறிந்து ஆராய்ந்து பார்க்கிறோமா? இதை நாம் சற்று சிந்தித்துப் பார்த்தால், நாம் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையை மெய்யாகவே கிறிஸ்துவுக்குள் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்வோம்.
நாம் இயேசுவைப் நோக்கி பார்க்கும்பொழுது தேவனுடைய கொள்கைகளும் கோட்பாடுகளும் செயல்முறையில் நடப்பிக்கப்பட்டதின் பூரணமான உதாரணத்தை காணலாம். அவர் தன்னலமற்றவராகவும், இரக்கமுள்ளவராகவும், வஞ்சகம் அல்லாதவராகவும், தாழ்மையானவராகவும், உண்மையானவராகவும் தைரியம் உள்ளவராகவும். நம்பத்தக்கவராயும் இருந்தார். சமுதாயத்தின் பொது கருத்துக்களும் சிந்தனைகளும் அவரின் நடக்கையை கட்டுப்படுத்தவில்லை. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தப்புவதற்காக மற்றவர்களை முகஸ்துதி செய்யவோ அல்லது சத்தியத்தை புரட்டவோ இல்லை அவருடைய பதில்கள் எப்பொழுதுமே ஆம் என்றும் இல்லை என்று மட்டுமே இருந்தன. அவர் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தும் அவர் அன்பாகவே இருந்தார். பிதாவின் சித்தத்திற்கு தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்தவராய் இருந்து. அவர் இறுமாப்பை வெளியரங்கம் ஆக்கினார், பலவீனர்களை பாதுகாத்தார். நொறுங்குண்டவர்களை கட்டினார். அவர் தம்முடைய சீஷர்களை அவர்களுடைய பலவீனங்களின் மத்தியிலும் தாங்கினார். அவர் மற்றவர்களுக்காக தன்னையே அர்ப்பணித்திருந்தாலும் மற்றவர்கள் தன்னை தவறாக துஷ்பிரயோகம் செய்து கையாளுவதற்கு அனுமதிக்கவில்லை. தனக்கு சுகமான வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்வதற்காக இந்த உலகத்தில் அவர் வாழவில்லை. மேலும், நாம் பழைய ஏற்பாட்டை ஆராய்ந்து பார்த்தால் அதில் இருக்கும் அனைத்து நியாயப்பிரமாணங்களும் தேவனின் குணாதிசயத்தின் பிரதிபலிப்புகளாகவே இருக்கின்றன என்பதை நாம் காண முடியும். புதிய ஏற்ப்பாட்டிலும் இதே கருத்து தொடர்கிறது. அதாவது, சீஷர்களும் அப்போஸ்தலர்களும் கிறிஸ்துவின் கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே வாழ்ந்து முடிவுகளை எடுத்தார்கள். அவருடைய குணாதிசயம் இல்லாமல் செயல்பட்ட எவரும் அவரால் நீக்கப்பட்டனர் அல்லது அவரால் சிட்ச்சிக்கப்பட்டார்கள். இதுவே ஆரம்பகால கிறிஸ்தவமும் திருச்சபையும் நிறுவப்பட்டதின் ஒரே அடிப்படையாகும்.
எனவே, இப்போது கேள்வி நம்மை நோக்கி கேட்கப்படுகிறது: நாம் இந்தக் கொள்கைகளின்படி வாழ்கிறோமா? நம்முடைய வார்த்தைகள், உறவுகள், முடிவுகள் மற்றும் மனப்பான்மைகள் அவரைப் பிரதிபலிக்கின்றதாய் இருக்கிறதா? இது எளிதான செயல்முறை அல்ல. நம்மை நாம் உள்நோக்கிப் பார்ப்பது வேதனையாக தான் இருக்கும். ஏனென்றால், நமக்குள்ளாக கிறிஸ்துவுடன் பொருந்தக்கூடாத சில குணாதிசயங்களை கண்டறிவோம். ஆனால், அங்குதான் நம்முடைய மறுரூபமாகப்படுதல் தொடங்குகிறது. எரேமியா 17:10 -ல் “கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை உள்ளிந்திரியங்களைச் ஆராய்கிறவரும் சோதித்தறிகிறவருமாயிருக்கிறன்.” நமக்குள் என்ன தவறு இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து அதனை அங்கீகரிக்கும் போது இறுதியில் நாம் அதிலிருந்து குணப்படுவதற்காக தேவனிடம் ஒப்புக்கொடுக்க முடியும். இது ஒரு யுத்தமாக தான் இருக்கும். ஆனால், இதில் போராடுவதற்கு தேவன் நமக்கு உதவி செய்வார். கலாத்தியர் 5:24,25 இப்படியாக நம்மை நினைவூட்டுகிறது. “24. கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். 25. நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும்கடவோம்.”நாம் தேவனுடைய கொள்கைகளில் நம்மை உறுதிப்படுத்தும் போது சத்துரு தனது பலத்தை இழக்கிறான். ஏனென்றால், தேவனுடைய கொள்கைகள் எங்கு ஆளுகை செய்கின்றனவோ அங்கு அவருடைய பிரசன்னம் ஆளுகை செய்கிறது. நம்முடைய கொள்கைகளை நாம் சீர்படுத்தாமல் நம்முடைய சத்துருவுக்கு எதிராக போராடுவது அர்த்தமற்றது. ரோமர் 8:31 “இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” அவருடைய கொள்கைகள் நமக்குள் வாசம் செய்யும்போது அவர் நம்முடன் இருக்கிறார். ஆனால் நாம் அவருடைய குணாதிசயங்களை எதிர்க்கிறவர்களாய் இருந்தால் அவருடைய பிரசன்னத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்? கிறிஸ்துவைப் போல் வாழுவது நமக்கு ஒரு யதார்த்தமான இயல்பான வாழ்க்கையாக மாறும் வரைக்கும் நம்முடைய இருதயங்களை அவர் ஆராய்ந்து அறிவதற்கும், நம்முடைய சிந்தனைகளை சீர் அமைப்பதற்கும், அவருடைய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நம்முடைய உள்ளான மனிதனுக்குள் எழுதும் படியாகவும் இன்று அவரை நாம் அழைப்போமாக.
இன்றைய சிந்தனைக்கு:
ஒரு கிறிஸ்தவராக, உங்களுடைய இயல்பான நடத்தை முறை என்னதாய் இருக்கிறது? உங்கள் சிந்தனையையும் நடத்தையையும் கட்டுப்படுத்தக்கூடியதாய் இருக்கும் அஸ்திபாரம் எது? எந்தக் கொள்கைகள் உங்களுடைய ஆத்துமாவை ஆளுகை செய்கின்றன? நீங்கள் எப்படிப்பட்ட குணாதிசயங்களை உடையவர்களாய் இருக்கிறீர்கள்? தேவனுடைய குணாதிசயத்துடன் உங்களுடைய குணாதிசயம் பொருத்தப்பட்டுள்ளதாய் இருக்கிறதா?
ஜெபம்:
பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, நாங்கள் பெரும்பாலும் உம்முடைய குணாதிசயத்தை உடையவர்களாய் இல்லை. நீர் இந்த பூமியில் உதாரணமாய் வாழ்ந்து காட்டின உம்முடைய கொள்கைகளை குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லாமல் நாங்கள் இருக்கிறோம். நாங்கள் பெரும்பாலும் எங்களுடைய வாழ்க்கையை மேலோட்டமாக வாழ்ந்து எப்படியோ ஒரு வழியில் எங்களுடைய வாழ்க்கையில் கடந்து சென்றால் போதும் என்று வாழ்கிறோம். எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அல்லது சந்தர்ப்பத்திலும் உம்மைப் போல் செயல்படுகிறோமா என்று சற்று நின்று நாங்கள் சிந்திப்பதில்லை. உண்மையாகவே எது எங்களுடைய அஸ்திபாரமாய் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள நீர் தந்த இந்த வாய்ப்புக்காக நன்றி சொல்லுகிறோம். எங்களுடைய இருதயத்தின் மேலும் ஒவ்வொரு சிந்தனை முறைகளுக்கு மேலும் உம்முடைய கொள்கைகள் மேலானதாய் ஆட்சி செய்து அவைகளை கட்டுப்படுத்துவதாக. உம்முடைய குணாதிசயமும் சாரம்சமும் எங்கள் ஆத்துமாவை ஆளுகை செய்வதாக. இதன் நிமித்தம் உம்முடைய சுபாவம் எங்களுக்குள் இருப்பதினால் நாங்கள் மற்றவர்களை நிலை நிறுத்துவோமாக. எங்கள் இராஜாதி இராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் இணையற்ற நாமத்தில் இதைக் கேட்கிறோம் நல்ல பிதாவே ஆமென்.
இன்றைக்கு கற்றுக்கொள்ள வேண்டியது:
கிறிஸ்தவம் என்பது வெறும் ஜெபம் செய்வது, வேதாகமத்தை வாசிப்பது, சபைக்கு செல்லுவது, கிறிஸ்தவ பாடல்களை கேட்பது மற்றும் நற்செய்தியைப் பிரசங்கிப்பது மட்டுமல்ல. அது, அதை விட மிகவும் ஆழமானது. அது, நம்மை எது கட்டுப்படுத்துகிறது என்பதின் பிரதிபலிப்பாகும். கிறிஸ்துவின் சிந்தையானது நம்முடைய சிந்திக்கும் முறைகளை கட்டுப்படுத்துமானால் நம்முடைய வாழ்க்கையில் அவரோடு பொருந்தாத எல்லா காரியங்களையும் நாம் எளிதாக களைப்புடுங்க முடியும். நாம் அநேக நேரம் நம்முடைய பொருளாதாரம். உறவுகள், தொழில்கள், எதிர்காலம் போன்றவைகளில் தோல்வி அடைந்து இருக்கிறோம். ஏனென்றால், நம்முடைய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் சீர் பொருத்தாமல் இவைகளை அடைய நாம் முயற்சிக்கின்றோம். இது விதைகளை நட்டு, நீர்ப்பாசனம் செய்து. அதை வளர்த்து. பழத்தை உற்பத்தி செய்யாமல் பழங்களை விரும்புவது போன்றதாகும். நமது குணாதிசயத்தின் அஸ்திபாரம் சீரமைக்கப்பட்டு அவரில் நிலைநிறுத்தப்படாவிட்டால், நாம் கட்டுகிற எதுவும் பெரும் வெள்ளத்தில் நிலை நிற்காது பெரும்பாலும், கவலைக்கிடமாக, நாம் கட்டிடத்தில் கவனம் செலுத்தி அஸ்திபாரத்தை மறந்து விடுகிறோம். நீதிமொழிகள் 4:23 சொல்வது போல் நமது வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள் அனைத்தும் நம்முடைய இருதயத்தின் நிலைப்பாட்டின் விளைவாகும். நாம் விடுதலைக்காக ஜெபிக்கும்போது, தேவன் எப்போதுமே நம்முடைய குணாதிசய வளர்ச்சிக்கு ஏதுவாக பதிலளிப்பார். எனவே, கிறிஸ்தவ மனப்பான்மை என்பது பிரச்சனைகளைத் தீர்க்க பாடுபடுவதற்குப் பதிலாக தன்னுடைய கொள்கைகளுக்காகவும் நெறிமுறைகளுக்காகவும் அமைதியுடனும் விடாமுயற்சியுடனும் செயல்படுவதாகும்.
(2025 நவம்பர் மாதம் 3 அன்று மத்தேயு 11:28 ஊழியத்தின் சார்பாக சகோதரி ஜெஸிந்த் ஏஞ்சல் அவர்கள் எழுதிய தினசரி வேத தியானத்தின் பிரதிபலிப்பு சகோதரி லல்லியால் மொழிப்பெயர்க்ப்பட்டது).
அறிவிப்புகள்:
1. உங்களுடைய சீஷத்துவ பயணத்தில் நீங்கள் ஆதரவைத் தேடுகிறீர்கள் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி) நடைபெறும் எங்களுடைய வாராந்திர சீஷத்துவ கூடுகையில் சேர உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
இணைப்பு:https://us06web.zoom.us/j/81144235750pwd=RG4veEdLQkJNSINXYWIZ WmNnb3EvQT09
(சந்திப்பு ஐடி: 811 4423 5750. கடவுச்சொல்: 12345).
2. தனிப்பட்ட ஆலோசனை பெறுவதற்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும். உங்களுடன் விசுவாசத்திலும் மற்றும் ஐக்கியத்திலும் நடக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்.
- எங்களுடைய ஊழியங்கள் மற்றும் கூடுகைகளை குறித்த அறிவிப்புகளுக்கும் மற்றும் தகவல் தொடர்புக்கும் எங்கள் வாட்ஸ்அப் குழுவில் சேரவும்: https://chatwhatsapp.com/FQuH58GtkEEApPCm9gN8no
- நேரடி ஆலோசனை பெற்றுக்கொள்ள நீங்கள் விரும்பினால், கீழே உள்ள இணைப்பை உபயோகித்து ஏற்பாடு செய்யுங்கள். https://scheduler.zoom.us/rev-immanuel-paul-appointment
Click Here to Download as PDF -> Tamil