வாராந்திர வேத தியானம்: பரிசுத்த ஆவியின் வல்லமையால், வேதத்தில் வேரூன்றிய வாழ்க்கை.
வேத தியானக் குறிப்பு: நியாயதிபதிகள் 15:14-15.
14.அவன் லேகிவரைக்கும் வந்து சேர்ந்தபோது, பெலிஸ்தர் அவனுக்கு விரோதமாய் ஆரவாரம் பண்ணினார்கள். அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி, அவன் கட்டுகள் அவன் கைகளை விட்டு அறுந்துபோயிற்று.
15. உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடையெலும்பைக் கண்டு, தன் கையை நீட்டி அதை எடுத்து, அதினாலே ஆயிரம்பேரைக் கொன்றுபோட்டான்.
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே,
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் வாழ்த்துக்கள். இன்று, நாம் நம்மை இடைநிறுத்தி, தேவனுடனான நம்முடைய வாழ்க்கை பயணத்தில் நம்மேல் பலருக்கும் அமைதியாக மறைந்து சவாலாக இருக்கும் ஒரு கேள்வியைப் பற்றி சிந்திக்க விரும்புகிறேன்: வேதத்தின் அசைக்க முடியாத அஸ்திபாரத்தின் மீது நாம் உண்மையாகவே நம்முடைய வாழ்க்கையைக் கட்டியெழுப்புகிறோமா, அல்லது தேவனுடைய வார்த்தையை விட நம்முடைய அனுபவங்களும் உணர்ச்சிகளும் மேலோங்கி நிற்கும்படி அனுமதித்து வருகிறோமா?
ஒரு கணம் சிம்சோனைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அதிசயமான செயல்களை செய்யும் வல்லமை அவனுக்குக் கொடுக்கப்பட்டது என்று வேதாகமம் சொல்கிறது. அவன் மரித்துக் கிடந்த ஒரு கழுதையின் தாடை எலும்பைப் பயன்படுத்தி ஆயிரம் எதிரிகளை அவன் தோற்கடித்தான். அது உண்மையிலேயே அற்புதமானது! ஆனாலும் சிம்சோன் அவனுடைய வாழ்க்கையில் வீழ்ச்சியடையக்கூடிய தவறான தீர்மானங்களை எடுத்தான். அவன் தவறான நண்பர்களைத் தேர்ந்தெடுத்தான், தற்காலிக இன்பங்களைப் பின்தொடர்ந்தான். மேலும் தேவனிடமிருந்து தன்னை விலகி இருக்கச் செய்யும் ஒரு கலாச்சாரத்துடன் இணைந்து வாழ்ந்தான். இறுதியில், தவறான வலியுறுத்தல்கள் அவனுடைய இருதயத்தை ஆதிக்கம் செலுத்த அவன் அனுமதித்ததினால், அவனுடைய கண்களும் மற்றும் பெலனும் பறிக்கப்பட்டன.
இது ஒரு வல்லமையான நினைவூட்டல் இல்லையா? பரிசுத்த ஆவியின் வல்லமையை நாம் பெற்றிருந்தாலும், நாம் எடுக்கும் முடிவுகள் — யாருடன் நாம் அமர்கிறோம், எதிலே நாம் ஈடுபடுகிறோம், எதனை நாம் முதன்மைப் படுத்துகிறோம். இவைகளே நாம் உண்மையான ஜெயத்தில் நடக்கிறோமா அல்லது தடுமாறுகிறோமா என்பதை தீர்மானிக்கின்றன. இராஜாவாகிய சவுலும் இதையே அனுபவித்தான். ஆவியானவர் அவனோடு கூட இருந்தார். ஆனாலும் அவனுடைய கவனச்சிதறல்கள், பொறுமையின்மை மற்றும் மோசமான தீர்மானங்கள் இவை அனைத்தும் தேவனோடு இருக்கக்கூடிய அவனுடைய ஐக்கியத்தை அழித்துவிட்டன.
ஆபாசம், மது, புகையிலை, கசப்பு மற்றும் தேவனிடமிருந்து வராத வேறு எதுவும் நம்முடைய ஆவிக்கூரிய வளர்ச்சியை அழித்துவிடும். மேலும் அதிகமாக, நாம் உலக இன்பங்களில் வாழ்ந்து, தேவனைப் புறக்கணித்தால், நம்முடைய வாழ்வில் ஆவியின் வல்லமையை இழக்க நேரிடும். ஆனால் இன்னும் நான் மீட்கப்படுவதற்கு நம்பிக்கை இருக்கிறது. யோபுவைப் போல, நாம் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு உடன்படிக்கை செய்யலாம்—அவரை மகிமைப்படுத்துவதற்க்கும், அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதற்கும், அவருடைய கொள்கைகளின்படி வாழ்வதற்குமான உறுதியான அர்ப்பணிப்பு. இந்த உடன்படிக்கை உலக இன்பங்களின் வலியுறுத்தல்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது மற்றும் நம்முடைய அடித்தளத்தை உறுதியாகவும் வைத்திருக்கிறது.
எனவே, இன்று நம்முடைய சவாலாக இருப்பது இதுதான்: கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, உலக முறைமைகளை விட்டுவிட்டு, ஒரு புதிய வாழ்க்கையை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால் கேள்வி இதுதான்: தேவனை மகிமைப்படுத்தும் தேர்வுகளை நாம் எடுப்போமா? அல்லது தவறான வலியுறுத்தல்களில் அமர்ந்து, தவறான இன்பங்களைத் தேடி, உலகக் கலாச்சாரம் நம்முடைய முடிவுகளை வடிவமைக்க அனுமதிப்போமா? உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
- என்னுடைய இந்த எண்ணம், என்னுடைய இந்த செயல், என்னுடைய இந்த உறவு வேதத்தில் வேரூன்றியதா?
- இயேசு கிறிஸ்து இதை அங்கீகரிப்பாரா?
- நம்முடைய பரிசுத்தமும் நீதியுமான தேவனுடைய பார்வையில் இது பிரியமானதா?
சபையே, ஆவியானவர் நமக்கு அவருடைய வல்லமையை அளிக்கிறார். ஆனால் அவர் கீழ்ப்படிதலுக்குப் பதிலாக வேறொன்றையும் மாற்றும்படி அறிவுறுத்தவில்லை. கீழ்ப்படிதல் நம்முடைய விருப்பத்தில் மாத்திரம் அல்ல , அது நம்முடைய அவசியமானதாக மாற வேண்டும். கீழ்ப்படிதல்கள் மற்றும் சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாக அவருடைய வல்லமை அளிக்கப்படுகிறது. நம்முடைய வாழ்க்கை தேவனுடைய வார்த்தையைக் கொண்டு கட்டப்படும்போது, நம்முடைய அடித்தளம் அசைக்க முடியாததாக இருக்கும்போது மற்றும் வேதத்தின் மூலம் ஆவியானவர் நம்மை வழிநடத்த அனுமதிக்கும் போது உண்மையான ஜெயம் வருகிறது. இப்படியே நாம் மாற்றம், சுதந்திரம் மற்றும் நித்திய ஜீவனுக்குரிய திருப்தியை அனுபவிக்கிறோம்.
எனவே, இன்று, வார்த்தையினால் வேரூன்றி இருக்கவும், ஆவியால் அதிகாரம் பெறவும், நிலையற்ற உலக இன்பங்களிலிருந்து பிரிந்து செல்லவும் ஒருவரையொருவர் ஊக்குவிப்போம். சிம்சோனின் வாழ்க்கை நமக்கு சவாலாக இருக்கட்டும். சரியான அடித்தளமும் மற்றும் தீர்மானங்களும் இல்லாத போது பெரிதான வல்லமையும் நம்மை அழிவுக்கு நேராக நடத்தக்கூடும். ஆனால் அவருடைய வல்லமை கீழ்ப்படிதல், ஜெபம், வேதம் மற்றும் ஆவிக்கூரிய ஐக்கியம் ஆகியவற்றுடன் இணைந்து இராஜாதி இராஜாவின் பிள்ளைகளாகிய நம்மை உண்மையான ஜெயத்திற்குள் நடத்திச் செல்கிறது.
இன்றைய சிந்தனை:
இன்று, உண்மையான பெலனும், ஜெயமும் தேவனுடைய வார்த்தையில் வேரூன்றி, ஆவியால் வழிநடத்தப்படும் வாழ்க்கையிலிருந்து வருகிறது என்பதை நான் நினைவூட்டுகிறேன். இயேசு ஊழியம் செய்வதற்கு முன்பாக ஜெபித்தார், உபவாசித்தார், வேதத்தைப் படித்தார், அதே போல், ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்க தேவனுக்கு முதன்மையான நேரத்தை நான் கொடுக்க வேண்டும். என்னுடைய எண்ணங்கள், செயல்கள் மற்றும் உறவுகளை நான் ஆராய வேண்டும். அவைகள் தேவனை மகிமைப்படுத்துகின்றதா, அவருடைய வார்த்தையுடன் சீர்பொருந்துகின்றதா என்று கேட்க வேண்டும். ஆவி எனக்கு வல்லமையை அளிக்கிறது, ஆனால் கீழ்ப்படிகிறதர்க்கும் அவருடைய சித்தத்தை பிரதிபலிக்கும் வகையில் தீர்மானங்களைச் செய்வதற்கும் நானே பொறுப்பாக இருக்கிறேன். ஆவிக்குரிய அடித்தளம் இல்லாத பெரிதான வல்லமை நம்மை அழிவுக்கு நேராக நடத்தக்கூடும் என்பதை சிம்சோனின் வாழ்க்கை எனக்கு எச்சரிக்கிறது. தினமும் வேதம், ஜெபம் மற்றும் ஆவிக்குரிய ஐக்கியத்தை தேடுவதன் மூலம், உண்மையான மாற்றத்தையும் சுதந்திரத்தையும் அனுபவிக்க முடியும். இன்று, நான் தேவனுடைய வார்த்தையில் வேரூன்றி இருக்கவும், ஆவியானவர் என்னை வழிநடத்தும்படி அனுமதிக்கவும், துரிதமான உலக இன்பங்களை எதிர்க்கவும் முடிவு செய்கிறேன்.
ஜெபம்:
எங்கள் பரலோகத்தின், பிதாவே இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, நான் உம்முடைய சமூகத்திற்கு வருகிறேன். உம்முடைய வார்த்தைக்காகவும், இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்காகவும், பரிசுத்த ஆவியின் ஆறுதலுக்காகவும் நன்றி. தேவனாகிய கர்த்தாவே , நீர் என்னை உம்முடைய சாயலில் உருவாக்கினீர். அதே சாயலில் வாழவும், உம்மிடம் நெருக்கமாக வளரவும், இருளில் நடப்பவர்களுக்கு நான் வெளிச்சமாகவும் இருக்க எனக்கு உதவி செய்யும். பல நேரங்களில், நீர் எனக்குக் கொடுத்தவற்றின் மதிப்பை நான் புரிந்து கொள்ளவில்லை. கெட்ட குமாரனைப் போல, நான் நித்தியமானதை தற்காலிகமானவற்றிற்க்காக மாற்றக் கொண்டேன். தேவனாகிய கர்த்தாவே உம்முடைய ஆசீர்வாதத்தை பொக்கிஷமாகக் பார்க்காமல் இருந்ததற்கு என்னை மன்னியும். உம்முடைய பிள்ளை என்று அழைக்கப்படுவதற்கு நான் தகுதியற்றவன் என்று எனக்குத் தெரியும், ஆனால் ஒரு அடிமையாக என்னை உம்மிடம் அர்ப்பணிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் மூலம் உமக்குப் பிரியமானதை மட்டுமே செய்து, என் வாழ்க்கையின் எல்லா நாட்களிலும் உமக்கு உண்மையாக ஊழியம் செய்ய என்னை அனுமதியும். தேவனாகிய கர்த்தாவே, என்னில் ஏதாவது தவறு இருக்கிறதா என்று ஆராய்ந்து பாரும். இயேசு கிறிஸ்துவே, உம்முடைய வழியாகிய – நித்திய பாதையில் – என்னை வழிநடத்தும். தேவனாகிய கர்த்தாவே, என்னுடைய கண்ணீரையும், என் இருதயத்தையும், என் முழுமையான ஒப்புக்கொடுத்தலையும் ஏற்றுக்கொள்ளும். என்னைச் சுத்திகரித்து, என்னைப் பெலப்படுத்தி, இயேசு கிறிஸ்துவின் மகிமைக்கென்று என்னை ஒரு கருவியாக மாற்றும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.
இந்த வாரம் கற்றுக்கொள்ள வேண்டியது:
உண்மையான பெலன் தேவனுடைய வார்த்தையில் வேரூன்றி, ஆவியால் வழிநடத்தப்படுவதிலிருந்தே வருகிறது. தேவனை மகிமைப்படுத்தும் தீர்மானங்களை எடுப்பதற்கு கீழ்ப்படிதல், ஜெபம் மற்றும் ஆவிக்குரிய ஐக்கியம் அவசியமாகும். உறுதியான அடித்தளம் இல்லாமல், பெரிய வல்லமை கூட அழிவுக்கு நேராக நடத்தக்கூடும், ஆனால் உறுதியான அடித்தளத்தினாலும் தேவனுடைய வல்லமையினாலும், நாம் உண்மையான ஜெயத்தையும் மாற்றத்தையும் அனுபவிக்கிறோம்.
(2026 ஜனவரி மாதம் 17 அன்று கேள் மத்தேயு 11:28 ஊழியங்கள் சார்பாக Rev. இம்மானுவேல் எபனேசர் பால் அவர்கள் எழுதிய தினசரி வேத தியானத்தின் பிரதிபலிப்பு சகோதரி லல்லியால் மொழிப்பெயர்க்ப்பட்டது).
அறிவிப்புகள்:
- உங்களுடைய சீஷத்துவ பயணத்தில் நீங்கள் ஆதரவை தேடுகிறீர்கள் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி) நடைபெறும் எங்களுடைய வாராந்திர சீஷத்துவ கூடுகையில் சேர உங்களை நாங்கள் அன்புடன் அழைக்கிறோம்.
இணைப்பு: https://us06web.zoom.us/j/81144235750pwd=RG4veEdLQkJNS1NxYW1ZWmNnb3EvQT09
(சந்திப்பு ஐடி (Meeting ID): 8114423 5750. கடவுச்சொல் (Password): 12345).
- தனிப்பட்ட ஆலோசனை பெற்றுக் கொள்ள நீங்கள் விரும்பினால் இந்த இணைப்பை உபயோகித்து தயவாக ஏற்பாடு செய்யுங்கள். https://scheduler.zoom.us/rev-immanuel-paul/appointment
- எங்களுடைய ஊழியங்கள் மற்றும் கூடுகைகளை குறித்த அறிவிப்புகள் மற்றும் தகவல் தொடர்புகளை பெற்றுக் கொள்ள எங்களுடைய வாட்ஸ்அப் (WhatsApp) குழுவில் சேர உங்களை அழைக்கிறோம் https://chat.whatsapp.com/EokMFGuZdgb23Sg8BsHzas
உங்களுடன் விசுவாசத்திலும் ஐக்கியத்திலும் நடக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்.
Click here to download as PDF ->Tamil